மேற்கு வங்கத்தில் சீட் கிடைக்காததால் மூத்த தலைவர்கள் அதிருப்தி பாஜவுக்கு தலைவலி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவை தேர்தலில் பாஜவில் பல மூத்த தலைவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதிருப்தியில் இருப்பது அக்கட்சித் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 42 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது. கடந்த 2019ல் நடந்த மக்களவை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களையும், பாஜ 18 இடங்களையும் கைப்பற்றின.

இம்முறை பாஜ 35 தொகுதிகளில் வெல்ல வேண்டுமென இலக்கு நிர்ணயித்துள்ளது. தேசிய அளவில் தனது பலத்தை நிரூபிக்க வழக்கம் போல் பாஜவை விட அதிகமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டுமென்பதில் திரிணாமுல் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா உறுதியாக உள்ளார். இதனால் மேற்கு வங்கத்தில் அனல் பறக்கும் போட்டி நிலவுகிறது. இதில் சில மூத்த தலைவர்களுக்கு இம் முறை சீட் தராதது பாஜ தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

19 வேட்பாளர்களை அறிவித்துள்ள பாஜ ஒன்றிய அமைச்சரும் அலிபுர்துவார் எம்பியுமான ஜான் பர்லா, மாநிலங்களவை எம்பி அனந்த மகாராஜ் ஆகியோரை கழற்றி விட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜ ஈடுபட்டுள்ளது. இதே போல திரிணாமுல் காங்கிரசில் சிட்டிங் எம்பிக்களில் 7 பேர் கழற்றி விடப்பட்டுள்ளனர். 26 புது முகங்களுக்கு மம்தா சீட் தந்துள்ளார். அதிலும் 11 பேர் அரசியலுக்கே கத்துக்குட்டிகள். இது அக்கட்சியில் பெரும் அதிருப்தி அலையை உருவாக்கி உள்ளது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு