விளையாட்டு அல்ல

அடுத்த ஒரு மாத காலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பொற்காலம் எனலாம். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், அதிலும் இந்தியாவில் நடக்கிறது என்றால் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இந்திய அணி விளையாடும் ஆட்டங்களில், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை மைதானத்தில் காண முடிகிறது. அதிலும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு நெல்லை அல்வாவை போன்றது. அகமதாபாத்தில் நடந்து முடிந்த இப்போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரியே இந்திய அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் 191 ரன்களுக்கு சுருண்டுவிட, இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு அந்த ரன்களை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது.

ஆனால், அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்கள் நடந்து கொண்ட விதம், நிச்சயம் அருவருப்பை ஏற்படுத்த கூடியதாகும். அப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் அவுட்டாகி டிரெஸ்ஸிங் ரூமுக்கு செல்கையில் ரசிகர்கள் எழுப்பிய கோஷங்கள் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக காட்சியளிக்கும் முகமது ரிஸ்வான் ஐதராபாத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஏகமனதாக புகழ்ந்திருந்தார். ‘விமான நிலையத்தில் இந்திய ரசிகர்கள் எங்களை வரவேற்ற விதம், மைதானத்தில் எங்களுக்காக ஆர்ப்பரித்த விதம், இவற்றையெல்லாம் வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

இந்திய மக்களின் அன்பிற்கும், விருந்தோம்பலுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்’ என ரிஸ்வான் தெரிவித்திருந்தார். ஆனால், இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ‘சீருடை அணிந்தாற்போல்’ ஒரே தோற்றத்திலோ, ஒரே மனநிலையிலோ இருப்பதில்லை. இடத்திற்கு இடம் அவர்களது குணநலன்களும், பண்புகளும் வேறுபடுவது அனைவரும் அறிந்ததே. பாகிஸ்தானுக்கு அகமதாபாத்தில் சென்று விளையாடுவதில் தொடக்கம் முதலே விருப்பம் இல்லை. வேறு மைதானத்தில் அப்போட்டியை நடத்த வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

கடைசியில் அகமதாபாத் மைதானத்திலேயே அப்போட்டி நடத்தப்பட்டது. பாகிஸ்தான் எதிர்பார்த்தது போலவே அவர்களுக்கு எந்த ஆதரவும் அங்கு கிடைக்கவில்லை. பாகிஸ்தான் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர் கூறியதுபோல, ‘அகமதாபாத்தில் நடந்த போட்டி ஐசிசி நடத்திய மாதிரி தெரியவில்லை. பிசிசிஐ நடத்திய போட்டி போலவே இருந்தது’ என்கிற அவரது வார்த்தையில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. இறுதிப்போட்டியில் அதே மைதானத்தில் இந்தியாவோடு நாங்கள் மோதுவோம் என்கிற அவரின் நப்பாசையையும் கூடவே வெளியிட்டுள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் என்பது மதம் போன்றது. சில சமயங்களில் ரசிகர்களின் செயல்பாடுகளை காணும்போது அதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். 1996ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலக கோப்பையிலும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ரசிகர்களின் கொந்தளிப்பு எல்லை மீறியது. அதுபோலவே தற்போது அகமதாபாத்திலும் ரசிகர்கள் எழுப்பிய மத கோஷம் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

இந்திய ரசிகர்களின் இந்த கோஷம் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கண்டித்துள்ளார். உண்மையில் இத்தகைய மதம் தொடர்புடைய விஷயங்களை மைதானங்களில் தவிர்ப்பதே விளையாட்டுக்கு பெருமை சேர்க்கும். இதுபோல் கோஷமிட்டு வெறுப்பை வளர்ப்பது தடுக்கப்பட வேண்டும். இது விளையாட்டான விஷயம் அல்ல. பாபர் அசாமிற்கு கோலி அன்போடு வழங்கிய ஜெர்சி பரிசு போன்ற நிகழ்வுகளே கிரிக்கெட்டை, விளையாட்டு ரசிகர்களின் சிம்மாசனத்தில் அமர்த்த கூடியதாகும்.

Related posts

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு