வடமாநில மக்களின் வாக்குகளை பெறுவதற்கு தமிழர்களை இழிவுபடுத்திய பாஜ வேட்பாளர்: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பரபரப்பு

சென்னை: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில், வடமாநில மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, தமிழர்கள் 500 ரூபாய் கொடுத்தால் ஓட்டு போட லைனில் நிற்பார்கள் என்று இழிவுபடுத்தி பேசிய பாஜ வேட்பாளருக்கு, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் வினோஜ் பி செல்வம். பாஜ தலைவர் அண்ணாமலைக்கு வினோஜ் பி செல்வம் நெருக்கமாக உள்ளதாலும், பல்வேறு செலவினங்களை அவர் செய்து வருவதாலும் அண்ணாமலை சிபாரிசின் பேரில் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதாக பாஜவினர் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு வினோஜ் பி செல்வம் புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.எல்.பி அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து, அங்கு வசிக்கும் வடமாநில மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, ‘‘தமிழகத்தில் மத்திய சென்னை தொகுதியில் தான் குறைவாக ஓட்டு சதவீதம் ஏற்படுகிறது. 14 லட்சம் ஓட்டுகள் இருந்தும் வாக்காளர்கள் முறையாக ஓட்டுச் சாவடிகளுக்கு சென்று ஓட்டு போடுவதில்லை. குறிப்பாக தேர்தல் என்றால் உங்களைப் போன்றவர்கள் (வட மாநில மக்கள்) விடுமுறை நாள் என நினைத்து சுற்றுலா கிளம்பி விடுகிறீர்கள். ஆனால், இங்குள்ள நபர்கள் (தமிழர்கள்) 500 ரூபாய் கொடுத்தால், வரிசையில் நின்று ஓட்டு போடுவார்கள். எனவே, இந்தமுறை இங்குள்ள ஒவ்வொருவரும் (வட மாநில நபர்கள்) தவறாமல் பாஜவுக்கு ஓட்டு போடவேண்டும். 20 நபர்களுக்கு நாம் போன் செய்து நம்மவர்களை (வட மாநில நபர்களை) ஓட்டு போட செய்தால், 20 நபர்கள் என்பது அவர்கள் குடும்பத்தில் உள்ள நபர்களையும் சேர்த்து 100 பேர் சென்று வாக்களிப்பார்கள்’’ என்று பேசினார்.

இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் அலுவலரிடம் புகார்: திமுக 72வது வார்டு மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான சரவணன் குறிப்பிட்ட இந்த வீடியோ ஆதாரங்களை திருவிக நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி மகாலட்சுமியிடம் நேற்று புகாராக கொடுத்துள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மேற்கண்ட புகாரை புளியந்தோப்பு உதவி கமிஷனர் ராஜாவுக்கு அனுப்பி, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி கூறியுள்ளார்.

Related posts

காரைக்குடியில் இருந்து சென்னை வந்த பல்லவன் ரயிலில் திடீர் புகை: பயணிகள் பதற்றம்

பெரம்பலூரில் ₹2,440 கோடியில் காலணி பூங்கா விரிவாக்கம்; 2028க்குள் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு: வெளிநாட்டு ஏற்றுமதியில் முக்கிய பங்கு

ஆர்டிஓ, தாலுகா அலுவலகங்கள் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்