வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். பருவமழை காலங்களின் போது குடியிருப்பு பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகர் முழுவதும் மழைநீர் வடிகால்கள் புதிதாக கட்டமைக்கக்கூடிய பணிகள் என்பது நடைபெற்று வருகிறது.

கடந்த வருடம் பருவமழைக்கு முன்னதாக குறிப்பிட்ட அளவிலான பணிகள் முழுமையாக நிறைவுபெற்றதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்பட்டது. இந்த சூழலில் மீதமுள்ள இடங்களில் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்னதாகவே மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் கட்டமைக்கக்கூடிய பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. சுமார் 1481 கோடி மதிப்பீட்டில் 371 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கக்கூடிய பணிகள் என்பதும், அதேநேரத்தில் பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடிகால்கள் அமைக்கக்கூடிய பணிகள் என்பதும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக குறிப்பிட்ட மழைநீர் வடிகால்கள் கட்டமைக்கக்கூடிய பணிகளை விரைந்து முடிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டிருக்கிறார். வருகின்ற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை தொடர்ந்து பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நேற்று மாலை இதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றிருந்தது.

அதில் பல்வேறு துறை ரீதியிலான அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் என பல்வேறு துறையினர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்