வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை 79 ஏரிகள் உடைப்பை தடுக்க 3 ஆயிரம் மணல் மூட்டைகள்

திருத்தணி: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக நீர்வளத்துறை சார்பில் திருத்தணி உட்கோட்டத்தில் 79 ஏரிகளில் ஏற்படும் உடைப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நந்தியாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு மழைநீர் நிரம்பி கசிவு மற்றும் உடைப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கும் வகையில், தயார் நிலையில் மணல் மூட்டைகள் வைக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

இதனை அடுத்து, நீர்வளத்துறை நந்தியாறு வடிநில உப கோட்ட உதவி செயற்பொறியாளர் ரமேஷ் தலைமையில் உப கோட்டத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான 79 ஏரிகள் உடைப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்த பணியில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகள் மழைக்கு முழுமையாக நிரம்பி கசிவு, உடைப்பு ஏற்படும் போது தடுக்கும் வகையில் 3 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நந்தியாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ரமேஷ் தெரிவித்தார்.

* செடி, கொடிகள் அகற்றும் பணி தீவிரம்
திருத்தணி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் மாநில நெடுஞ்சாலை 18 கி. மீ. மாவட்ட முக்கிய சாலை 42 கி.மீ. இதர மாவட்ட சாலை 129 கி.மீ. உள்ளது. இந்த சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் திருத்தணியிலிருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலைக்கு இருபுறமும் செடி, கொடிகள் மற்றும் முட்செடிகள் அடர்த்தியாக வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் ஒதுங்க முடியாத நிலையில் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், திருத்தணி உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ் ஆகியோர் மேற்பார்வையில் திருத்தணி முதல் ஆர்.கே.பேட்டை வரை மாநில நெடுஞ்சாலைக்கு இருபுறமும் அடர்த்தியாக வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் முட்செடிகளை அகற்றும் பணியில் சாலைப்பணியாளர்கள் 2 குழுக்களாக 10 பேர் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த செடிகொடிகள், முட்செடிகள் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது