வடகிழக்கு பருவமழை காலங்களில் குடிநீரின் தரத்தை உறுதிசெய்ய மாதிரி சேகரிப்பை அதிகரிக்க வேண்டும்: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழை காலங்களில், குடிநீரின் தரத்தை உறுதி செய்யும் வகையில், மாதிரி சேகரிப்பை 300லிருந்து 600ஆக அதிகரிக்க வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் வினய் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.ஜி.வினய் தலைமை வகித்து பேசியதாவது: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தற்போது, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரின் தரத்தை உறுதிசெய்வதற்காக நாளொன்றுக்கு 300 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகம் மூலம் பரிசோதிக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் குடிநீரின் மாதிரி சேகரிப்பு 600ஆக அதிகரிக்கப்பட வேண்டும். குடிநீரில் குளோரின் அளவு மற்றும் அதில் கலந்துள்ள திடப்பொருட்களின் அளவை பரிசோதிக்க, நாளொன்றுக்கு 2000 மாதிரிகள் என்பதை 3000 மாதிரிகளாக அதிகரிக்கப்பட்டு களப்பணியாளர்களால் பரிசோதிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக குடிநீரின் தரம் குறித்து பொதுமக்களிடமிருந்து குறைகள் தெரிவிக்கப்படும் போது, சம்பந்தப்பட்ட பகுதிகளில் அதிக அளவில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட வேண்டும். மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தினை ஆய்வு செய்வதற்காக தினம்தோறும் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும். குடிநீர் விநியோக நிலையங்களுக்கு தேவையான பிளீச்சிங் பவுடர், படிகாரம், சுண்ணாம்பு போன்ற ரசாயன பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட வேண்டும்.

மழைக்காலங்களில் குடிநீர் விநியோக நிலையங்களில் தேங்கும் மழைநீரினை இறைக்க பெரிய நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மற்றும் சிறிய நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் குடிநீர் விநியோக நிலையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். அனைத்து குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையங்களிலும் உள்ள இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும். ஜெனரேட்டர்களுக்கு தேவையான எரிபொருட்கள் இருப்பில் வைத்திருக்கப்பட வேண்டும். குடிநீர் விநியோக நிலையங்களிலும், கழிவு நீரிறைக்கும் நிலையங்களிலும் மணல் மூட்டைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

கடந்த மே மாதம் முதல் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்களில் மீண்டும் அடைப்பு ஏற்படாத வண்ணம் தொடர் கண்காணிப்புப் பணிகளை உறுதி செய்ய வேண்டும். அனைத்து களப்பணியாளர்களும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து தொலைபேசி மூலமாகவோ, நேரிடையாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலம் பெறக்கூடிய குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், தலைமைப் பொறியாளர் ஆர்.சிவமுருகன், கண்காணிப்புப் பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாதன் மற்றும் அனைத்துப் பகுதிப் பொறியாளர்கள் உள்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* தயார் நிலையில் 537 இயந்திரம்
கழிவுநீர் அடைப்பு ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, தூர்வாரும் இயந்திரங்கள், பெரிய ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் சிறிய ஜெட்ராடிங் இயந்திரங்கள், ஜெட்டிங் மற்றும் உறிஞ்சும் இயந்திரங்கள் மற்றும் கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் என மொத்தமுள்ள 537 இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

* 24 மணி நேர பணி
மழைக்காலங்களில் கழிவுநீர் அடைப்பு, கழிவுநீர் தேக்கம் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகளை சீர் செய்யும் வகையில் அனைத்து களப்பணியாளர்களும் 24 மணி நேரமும் பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களில் உரிய அறிவிப்பு பலகைகள், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!