வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; புதிய பணிகளுக்காக சாலைகளை தோண்டக்கூடாது: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: புதிய பணிகளுக்காக சாலைகளை தோண்டக் கூடாது என்று கலெக்கடர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, தலைமை செயலாளர் முருகானந்தம் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக்கான பேரிடர் ஆயத்த பணிகள் தொடர்பாக எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், துறை சார்ந்த செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தலைமை செயலாளர் முருகானந்தம், வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்க உள்ள நிலையில் எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதன்படி, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்கூட்டியே அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மண்டல அளவிலான பல்துறை ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டங்களை நடத்த வேண்டும். ஒவ்வொரு அலுவலர்களுக்குமான பேரிடர் மேலாண்மை பணிகள் வரையறுக்கப்பட வேண்டும். குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பேரிடர் ஆயத்தம் குறித்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். சென்னை வடிநில பகுதியில் நெடுஞ்சாலை, நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி, மெட்ரோ ரயில் ஆகிய துறைகளின் மூலம் நடைபெற்று வரும் பணிகளின் தரம் முன்னேற்றம் குறித்து, மாவட்ட மற்றும் மண்டல கண்காணிப்பாளர்களை கொண்டு கள ஆய்வு செய்ய வேண்டும். இந்த பகுதிகளில் நடந்து வரும் பேரிடர் தணிப்பு பணிகள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் அல்லது அக்டோபர் 10ம் தேதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். ஒரு சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், புதிய பணிக்காக சாலைகளை எக்காரணம் கொண்டும் தோண்டக்கூடாது.

பல்வேறு பணிகளுக்காக தோண்டிய பள்ளங்களை விரைந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, மழைநீர் வடிகால் பணிகள், நீர்நிலைகளில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றுவது, நிவாரண முகாம் கண்டறியும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் தீவிரப்படுத்த வேண்டும். பேரிடர் மீட்பு மற்றும் எச்சரிக்கை பணிகளுக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் மீட்பு உபகரணங்கள், வாகனங்கள், நீர் இறைப்பான்கள், படகுகள் பருவ மழை தொடங்கும் முன்னரே பாதிப்புகளுக்கு உள்ளாகும் தாழ்வான பகுதிகளில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை பின்பற்றி, மழை தொடங்கும் முன்னரே மாநிலத்தின் அதிக பாதிப்புகளுக்குள்ளாகும் பகுதிகளில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையிலான, பகுதிவாரியான வானிலை தகவல்கள் உடனுக்குடன் வழங்க நடடிவக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related posts

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இருநாட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனே அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை விமான நிலையத்தில் விமானம் பழுதுபார்க்கும் எம்ஆர்ஓ மையம் அமைக்கும் திட்டம் ரத்தா?: தமிழக அரசு 32,300 சதுர அடி நிலம் வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் ஆணையம் அலட்சியம்