வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் நாகர்கோவிலில் மழைநீர் வடிகால் ஓடைகளில் மண் அகற்றம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதியில் கடந்த காலங்களில் மழை பெய்யும்போது முக்கியமான இடங்களில் மழைநீர் தேங்குவது தொடர்கதையாக இருந்து வந்தது. மேலும் அசம்புரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, கன்காடியா பள்ளி அருகே மழைபெய்யும்போது அறுபோல் சாலையில் தண்ணீர் செல்வது வழக்கம். மழை காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்காதவகையில் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மேயர் மகேஷ் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அசம்புரோடு, மீனாட்சிபுரம், டெரிக் ஜங்சன் முதல் செட்டிகுளம் வரை, வெட்டூர்ணிமடம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அகற்றினர்.  மேலும் மழைநீர் ஓடைகளில் தேங்கி கிடந்த மண் புல்புதர்களை அகற்றினர். இதனால் தற்போது மழை பெய்யும்போது மாநகர பகுதியில் உள்ள சாலையில் தண்ணீர் தேங்குவது குறைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. அதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. வடகிழக்கு பருவமழை தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் மழையின் போது தண்ணீர் மாநகர பகுதியில் தேங்காமல் மழைநீர்வடிகால் மற்றும் கழிவுநீர் ஓடைகளில் தண்ணீர் சீராக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் அறிவுரை வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார் தலைமையில், சுகாதார அலுவலர்கள் மேற்பார்வையில் மாநகர பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் ஓடைகளில் மண்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. மாநகர பகுதியில் அசம்புரோட்டில் உள்ள காங்கேயம் ஓடையில் தேங்கி கிடக்கும் மண்ணை பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றும் பணி நடந்து வருகிறது.

இதுபோல் மாநகர பகுதியில பல்வேறு இடங்களில் மழைநீர் ஓடையில் உள்ள மண், புல்புதர்களை அகற்றும் பணி நடக்கிறது. இது குறித்து மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார் கூறியதாவது: நாகர்கோவில் மாநகர பகுதியில் 6 மாதத்திற்கு ஒருமுறை மழைநீர் வடிகாலில் தண்ணீர் தேங்காதவகையில் மண்டி கிடக்கும் மண், புதர்கள் அகற்றப்பட்டு வருகிறது. தொடங்க இருக்கும் வடகிழக்கு பருவமழையால் மாநகர பகுதியில் தண்ணீர் புகாதவகையில் மாநகர பகுதி முழுவதும் உள்ள மழைநீர் வடிகால் தூய்மை படுத்தும் பணி தொடங்கியுள்ளது. மாநகர பகுதியில் உள்ள பொதுப்பணிக்கு சொந்தமான கால்வாய்களிலும் மண், புதர்கள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக 5 கிட்டாச்சி, 4 பொக்லைன், மற்றும் லாரிகள் வாடகைக்கு எடுத்து வேலைகள் நடந்து வருகிறது. என்றார்.

Related posts

பலத்த போலீஸ் பாதுகாப்பு: ஜம்மு – காஷ்மீரில் நாளை 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு

மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு

ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் வலசை வரும் பறவைகளை கண்டுகளிக்க 2 தொலை நோக்கியுடன் மரப்பாலக் கூண்டு