வடகிழக்கு பருவமழை எதிரொலி நெல்லை மாவட்டத்தில் அமைச்சர் நேரு ஆய்வு

நெல்லை: நெல்லை மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், நெல்லை வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் கார்த்திகேயன், நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ், அப்துல் வகாப் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணைமேயர் கேஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஸ் குமார் மீனா, எஸ்.பி.சிலம்பரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது. நீர்வளத்துறையின் மூலம் அனைத்து நீர்த்தேக்கங்களும் தூர்வாரப்பட்டு சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மழைநீர் தங்கு தடையின்றி செல்வதற்கு முறையாக வடிகால்கள் பராமரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

மழைக்காலங்களில் நீர்நிலைகளில் பொதுமக்கள் பாதுகாப்பின்றி செல்லாமல் இருப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைத்துறை மூலம் அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் சீர் செய்யவும் அமைச்சர் உத்தரவிட்டார். மழைக்காலங்களில் காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் தேவையான முன்னெச்சரிக்கையுடன் மீட்பு பணிகள் மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Related posts

வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்