என்எல்சியில் 28 வட இந்தியர்களுக்கு வேலை கிடைத்தது எப்படி?..ஒன்றிய அரசு விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை : என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்த தமிழர்களுக்கு வேலை இல்லை, வட இந்தியர்கள் 28 பேருக்கு நிரந்தர வேலை வழங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை : கடலூர் நிர்வாகம் வழங்கிய பட்டியலின் அடிப்படையில் வட இந்தியர்கள் 28 பேருக்கு வழங்கப்பட்டிருப்பதாக என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் வட இந்தியர்களுக்கு சொந்தமான நிலங்களே இல்லை எனும் போது, வட இந்தியர்கள் எவ்வாறு நிலம் வழங்கியிருக்க முடியும்? அவர்கள் நிலமே வழங்காத நிலையில் அவர்களுக்கு எவ்வாறு வேலை வழங்கப்பட்டது?

1827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் கடந்த 2022ம் ஆண்டு எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விடையளித்திருந்தார். அப்போது ஒன்றிய அரசிடம் இல்லாத செய்திகளை என்.எல்.சி நிறுவனம் இணையத்தில் வெளியிட்டது எப்படி; இது தொடர்பான தகவல்களை நாடாளுமன்றத்தில் என்.எல்.சி மறைத்ததா? என்பது குறித்து விடையளிக்கப்பட வேண்டும்.

என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 ஆயிரத்துக்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில், நிலமே வழங்காத வட இந்தியர்களுக்கு என்.எல்.சி., வேலை வழங்கியது எப்படி? அது தொடர்பான தகவல்களை வழங்க மறுப்பது ஏன்? இதன் பின்னணியில் ஊழலும், முறைகேடுகளும் நடந்துள்ளனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த ஒன்றிய அரசு ஆணையிட வேண்டும்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்