திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவில் சிக்கி வடமாநில இளைஞர் பலி

திண்டிவனம் : திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணியின்போது மண் சரிவில் சிக்கி வடமாநில இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் நேற்று மாலை திண்டிவனம் ரொட்டிக்கார தெருவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்றன. அங்கு மேற்கு வங்காளம், ஜல்பைகுரி அடுத்த சைலிஹத் ரானிசேரா டீ கார்டன் பகுதியை சேர்ந்த சுக்மன் மிஞ் மகன் சிராஜ் மிஞ்(22) மற்றும் அவருடன் மூன்று வடமாநிலத்தவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

மூன்று பேர் மேலே இருந்து ஜல்லி கலந்து கொடுக்க, சிராஜ் மிஞ் பள்ளத்தில் இருந்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டு சிராஜ் மிஞ், மண் சரிவில் சிக்கிக் கொண்டார். அருகில் இருந்தவர்கள், சக பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கொண்டுவரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!