தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசின் குழுவிற்கும், ஆந்திர அரசின் முடிவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: தலைமை செயலக சங்க நிர்வாகிகள் அறிக்கை

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசின் குழுவிற்கும், ஆந்திர மாநில அரசின் முடிவுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு தலைமை செயலக சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 22ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பதில் அளித்தார். அப்போது, “ஏற்கனவே ஒன்றிய அரசு சோமநாதன் தலைமையில் ஒரு கமிட்டியை போட்டியிருக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் சில முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடு இவற்றை எல்லாம் கூர்ந்தாய்வு செய்யக்கூடிய நிலைமையில் இருக்கிறது. இவற்றையெல்லாம் ஆய்வு செய்து, எது நமக்கு பொருத்தமாக இருக்கும் என்பதையெல்லாம் கலந்தாலோசித்து, அதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பேசிதான் முடிவு சொல்ல முடியும்” என்று கூறியுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை தான் பொறுப்பேற்ற நாள் முதல் கனிவுடன் கேட்டறிந்து அதற்கு தீர்வும் கண்டுவரும் நிதி அமைச்சர், மேற்சொன்ன அம்சங்களை கூர்ந்தாய்வு செய்து, தேர்தல் கால வாக்குறுதியான மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு, ஒன்றிய அரசின் குழுவிற்கும், ஆந்திர மாநில அரசின் முடிவுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related posts

வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை

விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது..!!

சிதம்பரம் அருகே பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்..!!