நூற்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

பொதுவாக நாம் எந்தப் பயிரை சாகுபடி செய்தாலும், அதில் நன்மை செய்வதற்கும், தீமை செய்வதற்கும் சில ஜீவராசிகள் வந்து போகும். இதில் தீமையை மட்டுமே செய்து பயிர்களைத் தாக்கி, கடும் சேதம் விளைவிப்பதை சில புழுக்கள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன. அவற்றில் நூற்புழுக்களும் ஒன்று. இவற்றின் தாக்குதலால் பயிர்கள் சேதமாவதோடு, விளைச்சலும் கடுமையாக பாதிக்கும். பல்வேறு மலர் சாகுபடியிலும் நூற்புழுக்கள் தங்கள் வேலையைக் காட்டி இழப்பை ஏற்படுத்தி விடுகின்றன. மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி ஆகிய மலர் வகைகளில் எந்தெந்த நூற்புழுக்கள், என்னென்ன பிரச்னைகளை ஏற்படுத்தும், அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து அறிவோம்.

♦கனகாம்பரம்
பெண்கள் அதிகம் விரும்பும் மலர் வகைகளில் கனகாம்பரத்திற்கு முக்கிய இடம் உண்டு. கனகாம்பரச் செடியில் சில நூற்புழுக்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடும். குறிப்பாக வேரழுகல் நூற்புழு, சுருள்வடிவ நூற்புழு, வேர்முடிச்சு நூற்புழு மற்றும் ஊசி நூற்புழு போன்றவை கனகாம்பரத்தை காலி செய்துவிடும்.

♦வேரழுகல் நூற்புழு
இந்த நூற்புழுக்களால் தாக்கப்பட்ட செடிகள் குட்டையாகவும், இலைகள் இளஞ்சிவப்பிலிருந்து கருஞ்சிவப்பு நிறமாகவோ அல்லது மஞ்சள் நிறமாகவோ மாறி மேல்நோக்கி சுருண்டு காணப்படும். பூக்கள் சிறுத்து காணப்படும். வேரின் வளர்ச்சி தடைபட்டு, கருப்பு நிறமாகி அழுகிவிடும். பூக்களின் மகசூல் குறைவாகவும், தரமற்றதாகவும் மாறிவிடும். இந்த வேரழுகல் நூற்புழு பியூசேரியம் சொலானி எனும் பூசணத்துடன் சேர்ந்து செடியைத் தாக்குவதால் ஏற்படும் விளைவுகளே தமிழ்நாட்டில் கனகாம்பர பயிர் வளர்ச்சி குறைந்து வருவதற்கு காரணமாக விளங்குகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வேர்ப்பகுதியில் பியூசேரியம் சொலானி, பியூசேரியம் ஆக்ஸிஸ்போரம் என்னும் பூசணங்களும் காணப்படுகின்றன. கனகாம்பரச் செடிகளில் தொழுஉரத்தை இடுவதாலும், சாமந்தி வகைப் பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்வதாலும் நூற்புழுவைக் கட்டுப்படுத்த முடியும். கார்போபியூரான் செடிக்கு ஒரு கிராம் வீதமோ அல்லது நாற்றங்காலில் ஒரு சதுர மீட்டருக்கு 6 கிராம் வீதமோ இடுவதன் மூலம் நூற்புழுவைக் கட்டுப்படுத்தலாம். பயிர்களில் ஒரு எக்டருக்கு 33 கிலோ என்ற வீதத்தில் இதை இடலாம்.

♦வேர்முடிச்சு நூற்புழு
வேர்முடிச்சு நூற்புழுக்களால் தாக்கப்பட்ட கனகாம்பரச் செடிகள் குட்டையாக இருக்கும். கிளை ஓரங்கள் காய்ந்து காணப்படும். மலர்கள் சிறிய அளவில் இருக்கும். இந்த நூற்புழுக்களோடு பியூசேரியம் சொலானி என்னும் வாடல் பூசணமும் சேர்ந்து தாக்கினால் செடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு காய்ந்துவிடும்.கேந்தி அல்லது பங்கோலா புல்லை ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலம் இந்த நூற்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். இதில் கேந்திப் பூக்களை விற்பதால் கூடுதல் லாபம் பெறலாம். கார்போபியூரான் குருணை மருந்தை எக்டருக்கு 33 கிலோ இடுவதன் மூலமும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

♦ஊசி நூற்புழு
ஊசி நூற்புழுக்கள் தாக்கிய கனகாம்பரச்செடி கட்டையாகவும், குட்டையாக இருக்கும். வேர்களின் நுனிகள் வளைந்தும், கருத்தும் காணப்படும். காலிபிளவர், முட்டைக்கோசு, முள்ளங்கி போன்றவை இந்த நூற்புழு தாக்காத பயிர்களாகக் கருதப்படுகின்றன. ஆகவே இந்தப் பயிர்களில் ஒன்றை ஊடுபயிராகவோ அல்லது பயிர் சுழற்சியின் மூலமாகவோ உபயோகித்து பயன்பெறலாம்.

♦மல்லிகை
மலர்களில் எப்போதும் மல்லிகைக்குத்தான் முதலிடம். இத்தகைய மல்லிகைச் செடிகளை வேர் முடிச்சு நூற்புழு, வாள் நூற்புழு, சுருள்வடிவ நூற்புழு என 3 முக்கிய நூற்புழுக்கள் தாக்கி மகசூலைப் பாதிக்கச் செய்யும். இதனைக் கட்டுப்படுத்த, கார்போபியூரான் அல்லது போரேட் குருணை மருந்தினை செடி ஒன்றுக்கு 2 கிராம் வீதம் ஆண்டிற்கு இருமுறை (ஜனவரி, ஜூன் மாதங்களில்) இட்டு டிசம்பர் மாதத்தில் கவாத்து செய்த பின்பு தொழுஉரத்தினை செடி ஒன்றுக்கு 20 கிலோ இடலாம்.

♦சம்பங்கி
வேர்முடிச்சு நூற்புழுக்கள் இந்தப் பயிரை அதிகமாக தாக்கி மிகுந்த சேதத்தை விளைவிக்கும். வேரில் உள்ள முடிச்சுகள் ஒழுங்கற்றும், வெளிப்படையாகவும் காணப்படும். தாக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குறைந்து காணப்படும். இலைகள் மஞ்சள் நிறமாகி காய்ந்து காணப்படும். சில வேளைகளில் இந்த செடியின் இலைகள் கூட இந்த நூற்புழுக்களினால் பாதிக்கப்பட்டு முடிச்சுகள் காணப்படுகின்றன. கார்போபியூரான் குருணை மருந்தினை செடி ஒன்றுக்கு 2 கிராம் வீதம் இட்டு பயன்பெறலாம்.போரேட் 10 ஜி குருணை மருந்தை ஒரு எக்டருக்கு 33 கிலோ என்ற வீதத்தில் இடுவதன் மூலம் இந்நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம். பொதுவாக எந்த பயிரையும் பயிர் செய்வதற்கு முன்பு, மண்ணைப் பரிசோதனை செய்ய வேண்டும். அந்த வயலில் உள்ள நூற்புழுக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அந்த இடத்தில் நூற்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் பயிர் நடவு செய்வதைத் தவிர்க்கலாம். குருணை மருந்தினை மண்ணில் இடும்பொழுது, நீர்ப்பாய்ச்சுதல் மிக அவசியம். தொழு உரம் இடுவதால் மண்ணிலுள்ள அங்கக உரப்பொருட்கள் அதிகரிப்பதன் மூலம் பயிர்கள் நன்கு வளர்ந்து நல்ல மகசூல் கொடுக்க முடிகிறது. மேலும் நூற்புழுக்களை தாக்கும் ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள் மண்ணில் பெருகி, நூற்புழுக்களை அழிக்க உதவுகிறது. மண்ணை ஆழ உழவு செய்து தரிசாக விடுவதாலும் நூற்புழுக்களின் எண்ணிக்கையைக்
குறைக்கலாம்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது