வாங்கிய டூ வீலருக்கு தவணை கட்டாததால் விவகாரம் வீட்டுக்கு வந்து பணம் கேட்பியா…ஷோரூம் ஊழியருக்கு அடி- உதை

*குடும்பத்தோடு தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

ஓமலூர் : ஓமலூர் அருகே பைக் ஷோரூமில் புகுந்து, ஊழியரை கும்பல் சரமாரி தாக்கிய சிசிடிவி காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அண்ணா நகரில், பைக் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில் பைக் வாங்குவதற்கு, பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கடனுதவி வழங்கி வருகிறது.

ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சித்தா(23) என்பவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தனியார் வங்கியின் உதவியுடன் பல்சர் பைக் வாங்கியுள்ளார். ஆனால், தொடர்ந்து 2 மாதங்களாக மாத தவணை செலுத்தாமல் இருந்துள்ளார். அதனால், ஷோரூமில் இருந்த ஊழியர்கள், சித்தன் வீட்டுக்கு சென்று மாதத் தவணையை கேட்டுள்ளனர்.
நேற்று மதியம் ஷோரூமிற்கு தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்த சித்தா, அங்கிருந்த ஊழியர் இளங்கோ என்பவரை பார்த்து, என் வீட்டிற்கு வந்து பணம் கேட்பாயா?, அந்தளவிற்கு உனக்கு தைரியம் உள்ளதா என்று கூறி அவரை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர்.

அவரது குடும்பத்தினரும் அவரை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து வெளியே இருந்தவர்கள், உள்ளே சென்று அவர்களை விலக்கி விட்டனர். அப்போதும் ஆத்திரம் தீராத சித்தாவின் தாய், ஷோரூமில் இருந்த பிளாஸ்க்கை எடுத்து இளங்கோவன் தலையில் அடித்ததில், அவருக்கு மண்டை உடைந்தது. இதனால், மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பமே சேர்ந்து ஷோரூம் ஊழியரை தாக்கும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!