வேட்புமனுவில் தவறான தகவல் குறித்து விசாரணை சேலம் போலீசார் மீது எடப்பாடி திடீர் வழக்கு

சேலம்: வேட்புமனுவில் தவறான தகவல் குறித்து விசாரணை நடத்தும் சேலம் போலீசார் மீது எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்து உள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி, சேலம் 1வது நீதித்துறை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், ‘கடந்த சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது அசையும், அசையா சொத்துகள், தொழில் வருமானங்களுக்கான ஆவணங்களில் பொய்யான தகவலை கூறியுள்ளார். எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கலைவாணி, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் அதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். அதே நேரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், வருமானவரித்துறை, பத்திரபதிவுத்துறை, வங்கிகள் ஆகிய இடங்களில் எடப்பாடி பழனிசாமியின் ஆவணங்களை கேட்டு பெற்றுவந்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருவதால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 23ம் தேதி மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. ஆகியோர் வருகிற 7ம் தேதி பதில் அளிக்குமாறு கூறி வழக்கை நீதிபதி தள்ளிவைத்தார்.
இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 6ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கு இன்னும் பட்டியலுக்கு வரவில்லை. அந்த மனு விசாரணைக்கு வந்தால், வழக்கு விசாரணை சூடு பிடிக்கும் என கூறப்படுகிறது.

Related posts

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு