நொளம்பூரில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த வாலிபரிடம் ரூ.1.18 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

வளசரவாக்கம்: சென்னை அமைந்தகரை சுற்றுவட்டார பகுதியில் அடையாளம் தெரியாத வாகனத்தில் மர்ம நபர் ஒருவர் ஹவாலா பணம் பரிமாற்றம் செய்வதற்கு பணம் மற்றும் நகையை வாகனத்தில் எடுத்துக்கொண்டு செல்வதாக அமைந்தகரை போலீசாருக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலமாக ரகசிய தகவல் தெரிவித்துவிட்டு உடனே போனை தூண்டித்தார். இதையடுத்து, அமைந்தகரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையில் போலீசார் மாறுவேடத்தில் அமைந்தகரை சுற்றுவட்டார பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

ஆனால், அடையாளம் தெரியாத வாகனம் என்பதால் அது காரா, ஆட்டோவா, மினி வேனா என்பது தெரியாமல் அதை கண்டுபிடிப்பதில் போலீசார் கடும் குழப்பம் அடைந்தனர். இருப்பினும், தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதன்பின்னர் மீண்டும் அந்த மர்ம நபர் போலீசாருக்கு போன் செய்து அடையாளம் தெரியாத வாகனம் உங்களை தாண்டி தப்பிச்சென்று நொளம்பூர் பகுதியில் உள்ளதாக கூறி அந்த விலாசத்துடன் தகவலை சொல்லி விட்டு மீண்டும் போனை தூண்டித்துள்ளார்.

எனவே, போலீசார் அந்த வீட்டிற்கு விரைந்து சென்றபோது போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்ப முயன்றார். போலீசார் விரட்டி சென்று அந்த வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், அப்துல் ஹமீது (26) என்றும் ஹவாலா பணம் பரிமாற்றம் செய்ய பணம் மற்றும் நகைகளுடன் சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள இவரது சித்தப்பா வீட்டிற்கு வந்ததாக தெரிவித்தார். போலீசார் அந்த வீட்டை அதிரடி சோதனை செய்த போது ஒரு கோடியே 18 லட்சம் ரொக்கம் ஹவாலா பணம் மற்றும் 50 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்க நகைகளை பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அப்துல் ஹமீதை கைது செய்தனர்.

மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் மலேசியாவிலிருந்து சென்னை வந்து ஹவாலா பணம் பரிமாற்றம் செய்ய வந்தாரா அல்லது வேறு என்ன காரணத்துக்காக சென்னை வந்தார் என பல கோணங்களில் தொடர்ந்து விசாரிக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திடீர் என்று ஹவாலா பணம் பரிமாற்றம் செய்வதற்கு ரகசியமாக வந்த வாலிபரை போலீசார் துரிதமாக கைது செய்து பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்ததற்கு காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.

Related posts

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலூகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து ரூ.1,809.50க்கு விற்பனை: வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

ஜூலை-01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை