உன்னத உறவுகள்-பாசமான உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

ஆலமரத்தின் சிறிய விதை, தழைத்து ஓங்கி மிகப்பெரிய மரமாக வளர்ந்து அதன் விழுதுகள் தாங்கிப் பிடிப்பது போல்தான் நம் குடும்பத்தின் வேராக மூத்த தாத்தா, பாட்டிகள் விழுதுகள் போன்ற உறவுகளை நமக்கு ஏற்படுத்தித் தருகிறார்கள். குடும்ப வரைபடத்தை மரமாக வரையச் சொன்னால், அதன் ஒவ்வொரு கிளையும் அடுத்தடுத்த சந்ததிகள் என்று கூறலாம். இன்று தாத்தா, பாட்டிகள் இருப்பிடம் வேண்டுமானால் மாறலாம். ஆனால் இன்று நம்மையெல்லாம் இருக்க வைத்திருப்பதே நம் மூதாதையர்களான தாத்தா, பாட்டிகள்தான்.

மூத்தோர்களே இல்லாத குடும்பத்தில் ஆளுக்கு ஆள் தான் சொல்வதை மற்றவர்கள் கேட்டேயாக வேண்டும் என்று நினைத்து செயல்படுவார்கள். அங்கு தடபுடலாக காரியங்கள் நடக்கும். கணக்கின்றி செலவு யோசிக்காமலே, பணம் புரளும், இனிமை இல்லாமல் கடமையை நினைத்தே காரியங்கள் நடைபெறும். பெருமையாவது வந்து சேருமா என்றால் அதுவும் கேள்விக்குறியாகும். குடும்பத்தின் பெயரை எப்பொழுதுமே மூத்தவர்களைக் கொண்டே பேசுவார்கள். நம் முன்னோர்கள் இந்த பரம்பரையை சேர்ந்தவர்கள் என்று மற்றவர்கள் கூறுவதைக் கேட்கும் போது, மனதுக்கு சந்தோஷமாக இருக்கும். சிலர் அவர்களை அடையாளப்படுத்தி பேசுவார்கள்.

இன்று நாம் நம் பிள்ளைகளை வளர்க்க மிகவும் சிரமப்படுகிறோம். அவர்களை பொறுமையாக கையாள நம்மால் முடிவதில்லை. இதுவே பாட்டி இருந்தால் அவர்கள் கதை சொல்லி உணவை ஊட்டுவார்கள். இன்றைய கால கட்டத்தில் கணவன்-மனைவி வேலைக்குச் சென்று விடுவதால், குழந்தைகள் தங்களின் தேவையினை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்காக பாட்டி ஊட்டி விடுவது என்பது பெரிய தவறாகாது.

பாசத்தையும், அன்பையும் அவர்கள் உணவுடன் சேர்த்தல்லவா ஊட்டுகிறார்கள். வேலைக்கு அவசர அவசரமாக கிளம்பும் போது மதிய உணவுக்கான ‘டப்பாவை’ மட்டும் அம்மா பையில் வைக்க மாட்டார். நாம் கிளம்பும் அந்த நேரத்தில் தட்டில் சாதம் கொண்டு வந்து வாயில் திணிப்பாள். “ப்ளீஸ் இரண்டு வாய் வாங்கிக் ெகாள், வெறும் வயிற்றுடன் வெளியில் செல்லாதே” என்பாள். அவ்வளவு வளர்ந்த பிறகும் அம்மாவின் அரவணைப்பு அப்படி இருந்தது. இன்று சிறிய வயது பிள்ளைகள் கூட தனக்கு வேண்டியதை தானே செய்து கொள்ளும் நிலை. அதுதான் நல்ல பழக்கமாகவும் கருதப்படுகிறது. அம்மா பேசாமல் இருந்தாலும், வீட்டிலுள்ள பெரியவர்கள் அன்புக் கட்டளையிட்டு அனைத்தையும் இன்பமயமாக்கினார்கள்.

இன்று பிள்ளைகளை படிக்க வைப்பது, சாப்பிட வைப்பது, பகுதி நேர வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது என ஒவ்வொரு நாளும் பிரமாண்டமான செயல்கள் செய்வது போல் தோன்றுகிறது. அனைத்து வேலைகளுக்கும் மின்சார உபகரணங்கள் நம்மிடம் இருக்கின்றன. குடும்ப அங்கத்தினர் தவிர யாருமே கிடையாது. உணவுப் பொருட்களும் கடையில் வாங்கி சூடு செய்து சாப்பிட்டால் போதும் என்கிற வகையில் கிடைக்கப்படுகிறது. இருப்பினும் ‘நிம்மதி’ என்பது முழுமையில் கிடைப்பதுமில்லை.

பாசத்துடன் கூடிய அரவணைப்போ, ஆதரவு தரும் பேச்சு வார்த்தைகளோ பழக்கத்தில் காணப்படுவதுமில்லை. அறுபது, எழுபது ஆண்டுகாலம் வாழ்ந்த பெரியவர்கள் ஒவ்வொரு நாளும் எத்தனை வேலைகள் செய்திருப்பார்கள், எத்தனை விதமான பிரச்னைகளை மேற்கொண்டிருப்பார்கள், ஆனாலும் பந்தம்-பாசம் என்பது அவர்கள் ரத்தத்திலேயே கலந்திருந்தது. எத்தனை பேர் வீட்டிற்கு வந்தாலும் இனிய முகத்துடன் வரவேற்று, ஒருவர் அவர்களுக்கு முதலில் காபி, டீ கொடுத்து உபசரிப்பர். அதற்குள் வீட்டில் இருப்பவர்கள் அவர்களுக்கு தேவையான உணவு சமைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

வந்தவர்களுக்கு வேண்டியதையெல்லாம் சின்னஞ்சிறிசுகள் கூட எடுத்துத் தந்து உதவுவார்கள். குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து நிலாச்சோறு சாப்பிடுவதும், ஆனந்தமாக தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்களை ஆடுவதும் என்ன ஒரு கலகலப்பான சூழலை ஏற்படுத்தும் தெரியுமா? பெரியவர்கள் வீட்டுக்குள் ஆட, சிறிசுகள் எல்லோரும் வீட்டிற்கு வெளியே ‘பாண்டி’ விளையாடுவார்கள். இடையிடையே விளையாட்டுச் சண்டைகள் வரும். பெரியவர்கள் ஒன்று சேர்ந்து அதெல்லாம் ஒரு பொருட்டல்ல என்பது போல சமாதானம் செய்து இயல்பு நிலைக்கு அவர்களை மாற்றி விடுவார்கள். எதனாலும் யார் மனதும் பாதிக்காது.

படித்துப் பட்டம் பெற பல்கலைக்கழகங்களுக்குச் செல்கிறோம். ஒழுக்கம், கட்டுப்பாடு, பாசம், பந்தம், அன்பு போன்றவற்றை கற்றுத் தரும் பல்கலைக்கழகங்களாக நம் பெரியோர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதும், பெரியவர்களை மதித்தல், அனைவருடனும் சுமுகமாக பழகுதல், பிறருக்கு உதவுதல் போன்ற அனைத்தும் பெரியவர்களால் சிறு வயது முதலே கற்பிக்கப்பட்டது. உண்மை, நேர்மையான நற்குணம் அவர்களுக்குள் இயற்கையாகவே அமைந்துவிட்டன. வீட்டில் தாத்தா ஒருவர் இருந்தால் போதும். அவர் பிள்ளையையும் தண்டிப்பார். பேரனையும் தண்டிப்பார். அதே சமயம் அனைவரையும் மன்னிப்பதில் அவருக்கு நிகர் யாருமே கிடையாது.

குடும்ப அதிகாரம் முழுமையும் தாத்தா கையில்தான் இருக்கும். தாத்தா முன் அறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்துவிட்டால், புதிய ஆட்கள், தெரியாத ஆட்கள் யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது. ‘யார்’ என்று அதிரும் குரலில் கேட்டு விட்டால், உள்ளே நுழைய நினைப்பவர்கள் அதிர்ந்துதான் போவார்கள். வீட்டுக்கு பலமே அவர்தான் என்று சொல்லி விடலாம். வெளியில் சென்று விட்டோ, வேலைக்குச் சென்று விட்டோ லேட்டாக வந்து விட முடியாது. அப்படி லேட்டாக வந்தால் அவர் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டும்.

பெரியவர்களுடன் சேர்ந்து வசித்த கூட்டுக் குடும்பங்களில் தவறு செய்யவே பயந்தார்கள். எந்தக் கெட்ட பழக்கமும் அவர்களை அண்டாமல் இருந்தது. குடும்ப அனுசரணையும் ஒத்துழைப்பும் கிடைத்துக் கொண்டேயிருந்ததால் தவறான முடிவுகளுக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. குடும்பத்தின் பெரியவர்கள் ஒன்றாக அமர்ந்து கலந்து ஆலோசித்து எதையும் செய்தனர். தூரத்து உறவுகளாக இருந்தாலும், தக்க சமயத்திலும், தேவைப்படும் சமயங்களிலும் உதவ முன் வந்தார்கள்.

அத்தகைய ஆலோசனைகளை எடுத்துரைக்கக்கூட பெரியவர்கள் தேவைப்பட்டார்கள். கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பு, அன்பு செலுத்த வேண்டிய இடத்தில் அன்பு, தேவையறிந்து, பிள்ளைகள் மனமறிந்து அவர்களுக்கு விருப்பமானதை தருதல் அத்தனையும் ஒரே உருவத்தில் பதிந்திருந்தன. பார்க்க பயமாகவும் கம்பீரமாகவும் தோன்றினாலும் இளகிய மனம் கொண்ட நம் மூத்தோர்கள் இன்று எங்கேயிருக்கிறார்கள்? இழந்தவற்றைப் பெற்றுவிட முடியுமா? நாம் அனுபவித்த சுகமான தருணங்களை நம் பிள்ளைகளுக்கு தரமுடியுமா?

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாசன்

Related posts

வயிறு நிறைய சாப்பிடறதை விட மனசு நிறைந்து சாப்பிடணும்!

இந்த சமூகம் என்ன கொடுத்ததோ அதை திருப்பி செய்கிறேன்!

பெண்கள் யாரையும் எதிர்பார்க்காமல் சம்பாதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்!