‘ஏழைகளின் பங்காளன்’ என அழைக்கப்படும் நோபல் பரிசு பெற்ற முகமது யூனிஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நியமனம்

தாக்கா : வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்க அதிபர் முகமது சஹாபுதீன் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இடைக்கால அரசின் தலைவரை நியமிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிபர் சஹாபுதீன், முப்படை தளபதிகள், ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் நியமிக்கப்பட்டார். இதனை அதிபர் முகமது சஹாபுதீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வறுமையை எதிர்த்து போராடியதற்காக ஏழைகளின் பங்காளன் என்று அழைக்கப்பட்டவர் முகமது யூனிஸ். சிறந்த தொழில் முனைவோர், பொருளாதார நிபுணர் மற்றும் சிவில் சமூக தலைவர் என்று பல பொறுப்புகளை பெற்றவர். லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீள உதவியதற்காக 2006ம் ஆண்டு யுனிஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், வங்கதேச நாடாளுமன்றத்தை அந்நாட்டு ஜனாதிபதி முகமது சஹாபுதீன் நேற்று கலைத்துள்ளார். இதன் மூலம் புதிதாக பொதுத்தேர்தல் நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுவரையிலும் இடைக்கால அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.

Related posts

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குற்றாலத்தில் கார் பார்க்கிங் அதிக தொகைக்கு ஏலம்

தமிழக அரசிடம் இருந்து ஆலயத்தை மீட்டெடுக்க வேண்டுமென்று நிர்மலா கூறுகிறார்: செல்வப்பெருந்தகை கண்டனம்

கலசபாக்கம் அருகே டயர் வெடித்ததில் கார் மீது அரசு பஸ் மோதி பெண் உட்பட 2 பேர் நசுங்கி பலி