அரசியல் சாசனத்திற்கு எதிரான ‘மத்திய அரசு’ வேண்டாம்‘ஒன்றிய அரசு’ வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு


புதுடெல்லி: மத்திய அரசு என்பதற்கு பதில் ஒன்றிய அரசு என்று மாற்ற வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கொல்கத்தாவை சேர்ந்தவர் ஆத்மாராம் சரோகி. 84 வயதான இவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநலமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,’ நமது அரசியலமைப்பின் கீழ், இந்தியா என்ற நமது நாடு ‘மாநிலங்களின் ஒன்றியம்’ ஆகும், மேலும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த ‘மத்திய அரசாங்கம்’ என்ற இப்போதும் தொடர முடியாது. அனைத்து சட்டங்களிலும் பயன்படுத்தப்படும் ‘மத்திய அரசு’ என்ற சொற்றொடரை ‘ஒன்றிய அரசு’ அல்லது ‘யூனியன் ஆப் இந்தியா’ என்று குறிப்பிட வேண்டும்.

மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையேயான உறவை சிதைக்கும் சாத்தியமுள்ள இந்த பிழையை சரிசெய்வதற்கான உண்மையான அக்கறையுடன் மட்டுமே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்ட விவகாரத் துறையிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே நமது அரசியலமைப்பின் அனைத்து உத்தரவுகளிலும், அறிவிப்புகளிலும், ‘மத்திய அரசு’ என்பதை ‘ஒன்றியம்’ அல்லது ‘ஒன்றிய அரசு’ என்று மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ்சந்திரசர்மா மற்றும் நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,’ இது தேவையற்ற வழக்கு. பொதுநல மனுவாக இதை ஏற்க முடியாது. எனவே இதை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார். அப்போது நீதிபதிகள்,’ இந்த மனுவில் பொதுநலன் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே ‘மத்திய அரசு’ என்ற வார்த்தையை பயன்படுத்த தடை இல்லை’ என்று கருத்து தெரிவித்தனர். அதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் மத்திய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதில்லை.

அது எப்போதும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறது. பணியாளர்கள், பொதுக் குறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, ‘மத்திய அரசு’ என்பதற்குப் பதிலாக ‘யூனியன் ஆப் இந்தியா’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதை ஆய்வு செய்துள்ளது மத்திய அரசு’ என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட சட்டப்பூர்வமாக பயன்படுத்தப்படவில்லை. அரசியலமைப்பின் 1வது பிரிவு ‘ஒன்றியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. மத்திய என்ற வார்த்தை அதில் இல்லை.

அதே போல் அரசியல்சாசன பிரிவு 53ல் ஒன்றிய அரசுக்குத்தான் அதிக அளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 1897 பொது உட்பிரிவுகள் சட்டத்தின் பிரிவு 3(8)(பி)ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ‘மத்திய அரசு’ என்பதன் வரையறை அரசியல் சாசனத்திற்கு எதிரானது’ என்று வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டனர். மனுவுக்கு பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு, டிச. 5ம் தேதி விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது