வக்கீல்களை நியமிக்க வசதி இல்லை என்றால் தமிழக அரசே வக்கீல்களை நியமித்து உதவி செய்யும்

*அன்னூரில் நீதிபதி பேச்சு

அன்னூர் : அன்னூர் வட்ட சட்ட பணிக்குழு நடத்தும் சட்ட விழிப்புணர்வு முகாம் அன்னூரை அடுத்துள்ள குப்பனூரில் நடைபெற்றது. இதில், அன்னூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதி மோனிகா பேசியதாவது:இடப்பிரச்சனையா? குடும்பப் பிரச்சனையா?, குடும்பத்தகராறா?, மனைவி, கணவன் இடையே தகராறா. இதில் ஏதாவது வழக்குப்பதிவு செய்து கேட்டிருக்கிறீர்களா? அருகில் உள்ளவர்கள், உறவினர்கள் யாராவது இது சம்பந்தமாக கேட்டு உள்ளீர்களா? இந்த பிரச்சனையால் யாராவது வழக்கறிஞர்களை போய் பார்த்து உள்ளீர்களா? படிக்கத் தெரியாது என்ற காரணத்தால் எதையும் தவிர்க்காதீர்.

இது சம்பந்தமாக ஏதாவது பிரச்சனை இருந்தால் உடனடியாக வழக்கறிஞர்களை பார்க்க வேண்டும். அல்லது உங்களுக்கு எப்படி பார்க்க வேண்டும் என்று தெரியவில்லை என்றாலும் நீதிமன்றம் சார்பாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்க நாங்கள் உதவி செய்வோம். அருகில் இருப்பவர்கள் உங்கள் மீது வழக்கு பதிவு செய்தாலும் நீங்கள் வழக்கறிஞர்களை நியமிக்க முடியவில்லை என்றாலும், இலவசமாக அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் உங்களுக்காக வாதிட்டு உங்கள் உரிமையை பெற்று தருவார்கள்.

மேலும், நீதிமன்றத்தில் இருந்து குறிப்பிட்ட ஆணைகள் வந்தாலும் அதைக் கண்டு அஞ்சாமல், அவர்கள் என்ன கேட்கிறார்களோ அதற்கு தகுந்த உங்களுடைய ஆவணங்களையோ, உங்களது பதில்களையோ சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமா? என்று அச்சப்படாதீர்கள். நீதிமன்றத்தில் நீங்கள் குற்றவாளி என்று தெரிவிக்க போவதில்லை. இது சம்பந்தமாக உங்களிடம் கேள்விகள் மட்டுமே கேட்கப்படுகின்றன.

நீங்கள் அதற்காக வாதிட்டு பயப்படாமல் உங்கள் நீதிகளை தெரிவித்து போராடலாம். நீதிமன்றத்தில் இருந்து தபால்கள் மூலமாக கேள்விகள் கேட்கப்படும் போது, அதற்கு உரிய பதில் அளிக்காமல், கண்டுகொள்ளாமல் இருந்தால் அது உங்களுக்கு பாதகமாகவே செல்லும். இதனால், தாங்கள் நீதிமன்றத்திற்கு நேரடியாக வந்தோ அல்லது வழக்கறிஞர்கள் மூலமாகவோ அதற்கு உண்டான பதிலையும், கேள்விகளையும் கேட்க வேண்டும்.

இதற்காக பணம் கொடுத்து வழக்கறிஞர்களை நியமிக்க தேவையில்லை அரசு சார்பாக இலவசமாக வழக்கறிஞர்கள் உங்களுக்காக வாதிட்டு உரிமையை பெற்று தருவார்கள். காவல் நிலையத்தில் வழக்குப்பதிவானால், மறைந்து வாழாமல் நேரடியாக உங்களிடம் இருக்கும் நியாயத்தை சுட்டிக்காட்ட நீதிமன்றத்திற்கு வர வேண்டும். இதற்காக அச்சப்படக்கூடாது. இதனால் அருகில் உள்ளவர்கள் மேலும் இது போன்ற பிரச்சனைகளில் உள்ளவர்கள் உங்களின் மூலம் பாதுகாக்கப்படுவார்கள்.

நீதிமன்றம் நியாயத்தை காப்பாற்றி உங்களை நியாயத்தை உறுதிப்படுத்த நீதிமன்றம் செயல்படுகிறது. அதற்காக அச்சப்படக்கூடாது. இதற்காக மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. இதனால், நேரடியாக நீதிமன்றத்தில் பேசி தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் பேசி முடித்துக் கொள்ளலாம். இதனால், நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் குறை தீர்ப்பு மனு பெறப்பட்டது. இதில், பங்கேற்ற அனைவருக்கும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அதில் யார் இலவச சட்ட உதவி பெற தகுதியானவர்கள், சட்ட விழிப்புணர்வு அறிக்கை, மேலும் இதில் எந்த வழக்குகள் பிரச்சனைகளுக்கு இலவசமாக சட்ட உதவி பெறலாம், யாரை அணுகி எப்படி உதவி பெறலாம் என்ற துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

மேலும், தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கட்டணமில்லா இலவச சட்ட உதவி தொலைபேசி எண் 15100 என்ற டோல் ஃபிரீ நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம். மேலும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு 0422-2200009, 044-25342441 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

Related posts

பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: நீதிமன்றம் அனுமதி