2ம் போகத்திற்கு ஜன.7ல் தண்ணீர் திறப்பு கீழ் பவானி வாய்க்காலின் தரைத்தளத்தில் கான்கிரீட் அமைக்கும் திட்டமே கிடையாது

*அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோடு : கீழ் பவானி வாய்க்காலின் தரைத்தளத்தில் கான்கிரீட் அமைக்கும் திட்டமே கிடையாது எனவும், 2ம் போகத்திற்கு வரும் ஜனவரி மாதம் 7ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கீழ் பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக விவசாய பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். அந்தியூர் செல்வராஜ் எம்பி, திருச்செங்கோடு தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரன், திமுக சுற்றுச்சூழல் அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் முத்துசாமி பங்கேற்று விவசாயிகளிடம் கான்கிரீட் அமைப்பது தொடர்பாக ஆலோசனை மற்றும் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர், அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் அனைத்து நீர் நிலைகளையும் சரி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஆறு, வாய்க்கால், குளம், குட்டையாக எதுவாக இருந்தாலும் ஒரு பாதுகாப்பான நிலையை உருவாக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக உள்ளது. கீழ் பவானி வாய்க்காலை பொறுத்தவரை கான்கிரீட் அமைக்கும் பிரச்னை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

கான்கிரீட் தளம், சுவர் அமைக்க கூடாது என ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் கான்கிரீட் அமைக்க வேண்டும் என கருதுகின்றனர். இதில் அனைத்து தரப்பினரையும் பாதுகாக்கிற வகையில் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.ஏற்கனவே மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பல முறை பேசி, அதில் என்ன மாதிரியான சிக்கல்கள் உள்ளன, அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பை தயார் செய்து வைத்துள்ளார். கீழ்பவானி வாய்க்காலில் முதலில் பழைய கட்டுமானத்தில் பணிகளை மேற்கொள்ள துறைக்கு எந்த வித தடையும் இல்லை. உரிய நேரத்தில் துறையின் சார்பில் அந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது கான்கிரீட் போடக்கூடாது என கூறும் விவசாயிகளை அழைத்து பேசியுள்ளோம். விவசாயிகளிடம் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிற இடம், தண்ணீர் சென்று குத்துகிற இடம், மேல்புற வாய்க்கால் உள்ள இடம், மிக அதிகமாக தண்ணீர் வெளியே வந்து விவசாய நிலம் பாதிக்கப்படும் இடங்கள் குறித்து விவரங்கள் கேட்டுள்ளோம். இதற்காக 10 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அந்த குழு மூலமாக 10 நாட்களுக்குள் பட்டியலை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, எந்த இடங்களில் கான்கிரீட் மூலமாக பலப்படுத்துவது, மண் மூலமாக பலப்படுத்துவது என்பதை நியாயமாக வழங்க கூறியுள்ளோம். இந்த பட்டியல் வந்த பின், கான்கிரீட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாயிகளையும் அழைத்து பேசி, சுமூகமான முடிவை எடுத்து, அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

கீழ் பவானி வாய்க்கால் தரைத்தளத்தில் கான்கிரீட் போடுவதாக தவறாக கூறப்படுகிறது. கீழ் பவானி வாய்க்காலில் கீழே (தரைத்தளத்தில்) கான்கிரீட் போடும் திட்டமே கிடையாது என நான் திட்ட வட்டமாக கூறுகிறேன். கரைகள் (சைடில்) எங்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ, அங்கு கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்படும். இத்திட்டத்தின் நோக்கமே வாய்க்காலின் கடைமடைக்கு தண்ணீர் போய் சேர வேண்டும்.

கசிவு நீர் மூலம் விவசாயம் செய்யும் விளை நிலங்களையும் பாதுகாக்கவும், ஆயக்கட்டு விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.அதேபோல், வாய்க்காலின் கரைகளில் உள்ள மரங்கள் வெட்டாமல் பாதுகாக்க அரசிடம் ஒரு திட்டம் உள்ளது. முதலில் கான்கிரீட் பிரச்னை முடிவுக்கு வந்தபின், அதன்பின் மரங்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு எடுக்க உள்ளோம் என கூறுகிறோம்.

சிப்காட்டில் ஆலை உரிமையாளர்கள் எவ்வித தவறும் செய்யாமல் கழிவு நீர் வெளியேற்றியதாக சீல் வைத்ததாக கூறுவது தவறு. முறையாக ஆய்வு செய்து, விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா? என கண்டறிந்து தான் நடவடிக்கை எடுத்துள்ளனர். விளைநிலங்கள், நிலத்தடி நீரை பாதுகாப்பிற்கு ஆலை நிர்வாகத்தினர் அவர்களுக்கு ஏற்படுத்துள்ள விதிமுறைகள் மற்றும் சட்டங்களை கடைபிடித்து நடந்து கொள்ள வேண்டும். சிப்காட் கழிவு நீர் பிரச்சனைக்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.40 கோடியை முதல்வர் ஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளார்.
அங்கு கூடுதலாக மற்றொரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

சிப்காட் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீரை உறிஞ்சி இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலமாக சுத்திகரித்து அந்த தண்ணீரை ஆலைகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.
இதன்மூலம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் சிப்காட் பகுதியில் நிலத்தடி நீர் சுத்தம் செய்து விட முடியும். இதற்கு குறிப்பிட்ட காலஅவகாசம் வழங்க வேண்டும். எனவே, இந்த திட்டத்திற்கு ஆலை உரிமையாளர்களும், போராட்டம் நடத்தும் பொதுமக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

கீழ்பவானி வாய்க்காலில் வரும் ஜனவரி 7ம் தேதி 2ம் போகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவசாயிகளும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. அனைத்தும் கேட்டறிந்து இறுதி செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.இக்கூட்டத்தில் கீழ் பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருமூர்த்தி, பவானிசாகர் அணை கோட்ட செயற்பொறியாளர் அருள் அழகன் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி

நாமக்கல் முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு