NMMS தேர்வு என்றால் என்ன தெரியுமா?

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் இடை நிற்றலைத் தடுக்கவும், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாண வர்களுக்காகவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குத் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (NMMS-National Means-cum-Merit Scholarship Scheme) மத்திய அரசு கல்வி அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு முன் ஆண்டே டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும். இத்தேர்வில், பங்கேற்கும்

மாணவர்களின் குடும்ப வருமானம் 1.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பதுடன், ஏழாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வில் குறைந்தபட்சம், 55 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு எழுதும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும். அதாவது ஒவ்வொரு வருடமும் ரூ.12 ஆயிரம் வீதம் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.பெரும்பாலான தனியார் பள்ளி மாணவர்கள், இத்தேர்வுக்கு சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற பயிற்சிகள் கிடைப்பதில்லை. பொதுவாக, அரசு பள்ளிகளில் இத்தேர்வு குறித்த விழிப்புணர்வு குறைவால், அதிக அளவு மாணவர்கள் பங்கேற்பதில்லை.

தனியார் பள்ளி மாணவர்களைகாட்டிலும், இதுபோன்ற கல்வி உதவித்தொகை, அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கே தேவைப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களின் நலன் கருதி, என்.எம்.எம்.எஸ்., தேர்வில் அனைத்துப் பள்ளிகளிலிருந்தும், அதிகப்படியான மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தியும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படவில்லை.இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் < https://www.dge.tn.gov.in/ > என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்படும். பள்ளிகளுக்கான பதிவு எண், பாஸ்வேர்டைப் பயன்படுத்தி மாணவர்களின் இஎம்ஐஎஸ் எண்ணினை பதிவு செய்தவுடன் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும். அவ்விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திருத்தங்களை மேற்கொள்ளவும், விடுபட்டுள்ள விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும். NMMS தேர்வுக்கு மாணவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் ( மாணவரின் பெயர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் எவ்வாறு இடம் பெற வேண்டுமோ அதன்படி) EMIS இணையதளத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அதன் பின்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாணவர் பெயா், தந்தை / பாதுகாவலர் பெயர், பிறந்த தேதி, பாலினம், கைபேசி எண் போன்ற விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ள விவரங்களுடன் ஒத்திருக்கவேண்டும். மாணவரின் பெற்றோர்/ பாதுகாவலர் பயன்படுத்தும் நடைமுறையில் உள்ள கைபேசி எண்ணையே அளிக்க வேண்டும். உதவித் தொகை சார்ந்து அவ்வப்போது குறுஞ்செய்தி அல்லது கடவுச்சொல் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கே அனுப்பப்படும் என்பதால் அந்த கைபேசி எண்ணைக் குறைந்தது தொடரும் ஐந்து ஆண்டுகளுக்கு மாற்றாமல் வைத்திருக்க வேண்டும். தேர்வர்கள் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்துள்ள விவரங்கள் சரிதானா என்பதை பள்ளி ஆவணங்களை ஒப்பிட்டு சரிபார்த்த பின்னரே பதிவேற்றம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் எனில் அதற்கான தேசிய அடையாள அட்டையினை மாணவர்களிடமிருந்து பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.பள்ளி முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயா், முகவரியை அஞ்சல் குறியீட்டுடன் பதிவு செய்ய வேண்டும். வீட்டு முகவரி என்ற இடத்தில் தேர்வு எழுத உள்ள மாணவரின் வீட்டு முகவரி மட்டுமே பதியப்படவேண்டும்.

பதிவு செய்த விவரங்களை Declaration form Print out கொண்டு சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பதிவேற்றம் செய்த விவரங்களில் மாற்றம் ஏதேனும் இருப்பின் தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவற்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்திய பின் எந்த பதிவுகளும் கண்டிப்பாக மாற்ற இயலாது.மேற்படி தேர்வுக்கான கட்டணம் ரூ.50 வீதம் DGE PORTAL-ல் Online-ல் அனைத்து விண்ணப்பங்களும் பதிவேற்றம் செய்த பிறகு தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பதிவேற்றம் முடிந்தவுடன் ஒரு தேர்வருக்கு ரூ.50 வீதம் விண்ணப்பித்த தேர்வர்களின் விவரப்பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

Related posts

வரும் 20ம்தேதி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கிறது; திமுக வழக்கறிஞர் அணி சார்பில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கருத்தரங்கம்: சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ அறிவிப்பு

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்

மோடி சமூக நீதியைக் கடைபிடிக்காமல் மதவாத போக்கை கடைபிடிக்கிறார்: திமுக எம்.பி. ஆ.ராசா