நஞ்சே இல்லாத பொருட்களை விற்க வேண்டும் என்பதே ஆசை : தமிழ்ப் பேராசிரியர் சித்தி ஜீனத் நிஷா!!

நமக்குக் கிடைத்த இந்த மனித வாழ்க்கை இறைவன் கொடுத்த மிகப்பெரும் பரிசு. அதே இறைவன் நாம் நோய் நொடியின்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மூலிகைகளைப் படைத்துள்ளான். ஆனால் அதன் அருமை தெரியாமல் நாம் அதை பயன்படுத்தாமல் மனம் போன போக்கில் வாழத் தொடங்கி இன்று பல இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறோம். என்னால் முடிந்த வரையில் நஞ்சு இல்லாத பொருட்களை உணவில் சேர்க்க வேண்டும். நஞ்சற்ற உணவுகளைப் பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. மூலிகை களின் அருமை பெருமைகளை அனைவரும் தெரிந்து கொள்ளச் செய்ய வேண்டும். அதன் மூலம் பயன்பெறச் செய்ய வேண்டும் என்கிறார் சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஹெர்பல்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் சித்தி ஜீனத் நிஷா.

உங்களுக்கு மூலிகைச் செடிகளின் மீதான ஆர்வம் வந்தது ஏன்?

சிறு வயதில் இருந்தே செடிகளின் மேல் எனக்கு மிகுந்த விருப்பம் இருந்தது. என்னுடைய பாட்டி நிறைய கை வைத்தியங்களை செய்வதை நான் பார்த்து இருக்கிறேன். அதனால் சில மூலிகைகளின் பெயர்கள் எனக்குத் தெரியும். சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருந்ததால் புத்தகங்களில் வரும் மூலிகை குறித்த தகவல்களை சேகரித்து வைத்து நான் செய்து பார்ப்பேன். என்னுடைய ஏழாம் வகுப்பில் கட்டுரைப்போட்டியில் முதல் பரிசாக பெற்ற மூலிகை மருத்துவம் என்ற புத்தகத்தின் மூலம் மேலும் பல மூலிகைகளின் பயனையும் பலனையும் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆர்வத்தின் காரணமாக மூலிகைகளைப் பயன்படுத்தி வந்த எனக்கு என்னுடைய முதல் கர்ப்பகாலத்தின் போது ஏற்பட்ட பிரச்னைகள் மற்றும் பிரசவத்தில் ஏற்பட்ட பிரச்னைகளும் மூலிகை மருத்துவம் குறித்து தீவிரமாக படிக்கத் தூண்டியது. எவ்வளவு தொலைவாக இருந்தாலும் மூலிகைகள் குறித்து யார் பாடம் நடத்தினாலும் போய் கற்றுக்கொண்டு வருவேன். அதை வைத்து நான் புதிதாக என்ன செய்யலாம் என்று யோசித்து செய்து பார்ப்பேன்.

இதற்கான மூலிகைகள் எங்கு கிடைக்கிறது?

தற்போது எல்லா இடத்திலும் மூலிகைகள் நன்றாகவே கிடைக்கிறது எனினும் நான் பெரும்பாலான மூலிகைகளை நேரடியாகவே விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொள்கிறேன். குறிப்பாக விவசாயிகளிடமிருந்து வெட்டிவேர் மற்றும் மஞ்சள் போன்றவற்றை நேரிடையாக வாங்கிக்கொள்வேன். தேவைப்படும் பச்சை மூலிகைகளையும் புதிதாகப் பறித்து அனுப்பி வைக்க சொல்லி வாங்கிக் கொள்வேன்.

நீங்கள் தயாரிக்கும் பொருட்கள் என்னென்ன?

தற்போது நான் குளிர்ச்சித் தைலம், முகப்பொலிவுத் தைலம், பாத அழகுத் தைலம், பொடுகுத் தைலம், அரிப்பு மற்றும் படர்தாமரை நீக்கும் தைலம், ஜீரணப் பொடி, மலச்சிக்கல் நீக்கும் பொடி, பற்பொடி, முகப்பொலிவுப் பொடி, பல வகையான காய்கறி பழங்கள் சேர்த்த இயற்கை குளியல் சோப்புகள், தரமான பெருங்காயத்தூள் போன்ற பொருட்களை இயற்கை முறையிலேயே செய்து வருகிறேன்.

உங்கள் தயாரிப்புகளின் நன்மைகள் குறித்து…

முகப்பொலிவுத் தைலம் கருமை, மங்கு, கருவளையம் நீங்கி முகம் பொலிவு பெறும்.
தோல் சுருக்கம் நீங்கி மென்மையாகும். வெயிலால் ஏற்படும் நிறமாற்றம் நீங்கும்.
குளிர்ச்சித் தைலம் (கூல் ஆயில்)
உடல் சூடு தணித்திடும்.
கண் எரிச்சல் குறையும்.
நன்றாகத் தூக்கம் வரும்.

இப்பொருட்களின் தனிச்சிறப்புகள் என்ன?

பொதுவாகவே நான் சுத்தமான செக்கில் ஆட்டிய எண்ணெய்களை மட்டும் தான் நேரடியாக வாங்கி பயன்படுத்துகிறேன்.

எங்கெல்லாம் விற்பனை செய்கிறீர்கள்?

உள்ளூரில் இருக்கும் என் நண்பர்கள் மூலம் அமெரிக்கா, கனடா, மலேஷியா, சிங்கப்பூர், நியூஸிலாந்து, துபாய், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கும் என்னுடைய பொருட்கள் பயணிக்கிறது. என்னுடைய முக அழகு பவுடரின் பெரிய வாடிக்கையாளர்களே வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தான். அதை கேட்பவர்களுக்கு மட்டுமே கஸ்டமைஸ்டாக தயாரித்து தருகிறேன்.

இயற்கை முறையிலான சோப் தயாரிப்பில் ஈடுபட்டது ஏன்?

என்னுடைய மற்ற பொருட்களை பயன்படுத்தியவர்கள் அவர்களின் தேவைக்கு சோப் செய்து தருமாறு என்னிடம் தொடர்ந்து கேட்டனர். எனினும் 100% இயற்கையாக சோப் தயாரிக்க முடியாது என்பதால் அதை தவிர்த்து வந்தேன். இருப்பினும் தொடர்ந்து கேட்கவே அதிலும் சிறந்ததைத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் காய்கறி மற்றும் பழங்களைப் பயன்படுத்தி அதன் சாற்றில் சோப் தயாரித்துக் கொடுத்தேன். அதற்கும் எனது நண்பர்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்தனர். கேரட், பீட்ரூட், வெள்ளரி, உருளை, பப்பாளி, மாதுளை, தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றின் அசல் சாறுகளை வைத்து எந்த செயற்கை நிறங்களும் பயன்படுத்தாமல் அதன் உண்மை நிறத்திலேயே செய்து கொடுக்கிறேன். பிஸ்தா ஓடுகளை வைத்தும் சோப் தயாரித்துக் கொடுக்கிறேன். பெரும்பாலும் இளவயது கல்லூரி, பள்ளி மாணவர்களே என்னிடம் தொடர்ந்து வாங்குகிறார்கள்.

பெருங்காயம் தயாரிக்கும் எண்ணம் ஏற்பட்டது ஏன்?

இன்று அதிகப்படியாக கலப்படம் செய்யக்கூடிய உணவுப்பொருள் என்று பார்த்தால் அது பெருங்காயமாகத்தான் இருக்கும் . பெருங்காய வாசனைத் தரக் கூடிய திரவியங்களை மைதாவில் சேர்த்து தான் பெருங்காயத்தூள் தயாரிக்கப்படுகிறது. பல கூட்டுப் பொருட்கள் சேர்த்து செய்வதால் அதற்கு பெயர் கூட்டுப் பெருங்காயம் (Compounded Asafoetida) என்று பெயர். தூய பெருங்காயத்தைப் பயன்படுத்தும் பொழுது நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். பெருங்காயத்தின் பயனைத் தெரிந்து கொண்ட பிறகு அதை எப்படி கலப்படம் இல்லாமல் தயாரிப்பது எனத் தேடித் தேடி கற்றுக்கொண்டேன். அதற்கு பிறகு அதை தயார் செய்து என் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்தேன். அதை பயன்படுத்தியவர்கள் தொடர்ந்து என்னிடம் வாங்குகிறார்கள். பெருங்காயத்தின் மூலப்பொருளான பெருங்காயப் பால் தங்கம் போல தினம் தினம் விலை ஏறக்கூடிய ஒரு பொருளாகும். அதனால் தான் இத்தகைய பெருங்காயத்தூள் கடையில் கிடைக்கும் விலையை விட சற்று அதிகமாக இருக்கும்.பெருங்காயப் பாலை நான் நேரடியாகவே கொள்முதல் செய்து கொள்கிறேன். இந்த பெருங்காயத்தூள் பயன்படுத்துவதால் வாயு பிரச்னை நீங்கும். செரிமானம் எளிதாகும். அஜீரணக் கோளாறு, வயிற்று உப்புசம் போன்றவை நீங்கும்.

ஸ்பெஷல் முக அழகு பவுடர் குறித்து சொல்லுங்கள்?

என்னிடம் பிரத்யேகமாகக் கேட்பவர்களுக்கென மூலிகை முக அழகு பவுடர் செய்து கொடுக்கிறேன். அதில் முதன்மை மூலப்பொருளாக குங்குமப்பூ, பாதாம், முந்திரி, வெள்ளரி விதை, பூசணி விதை, பனீர் ரோஜா, தாமரை, ஆவாரம்பூ ஆகியவற்றை சேர்ப்பதுடன் இன்னும் பல நாட்டுமருந்து பொருட் களையும் சேர்த்துச் செய்கிறேன். பெரும்பாலும் வெளிநாட்டில் வசிப்பவர்களும், திருமணத்திற்கு தயாராகிக் கொண்டு இருப்பவர்களும் இந்த முகஅழகு பவுடருக்கு முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்து வருகிறார்கள். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்துமே இயற்கையாக அழகைக் கூட்டும் தரமான மூலப்பொருட்கள்தான். இதை பயன்படுத்தியவர்கள் தொடர்ந்து தயாரித்து தர கேட்கிறார்கள் என்பதே அதன் தனிச்சிறப்பினை சொல்லும்.

எதிர்காலத் திட்டங்கள் குறித்து..
.

முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்கள், அதில் மதிப்புகூட்டப்பட்டு செய்த பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஒரு கடையினை வைக்க வேண்டும். செயற்கை உரங்கள் சேர்த்து விளைந்த எந்த பொருட்களையும் அங்கு விற்பனை செய்யக் கூடாது. எந்த மாவட்டத்தில் என்ன பொருள் விளையுமோ அதை நேரடியாக விவசாயியிடம் இருந்தே பெற்று விற்பனை செய்ய வேண்டும். அதற்காக இப்பொழுதே இயற்கை விவசாயிகளிடம் பேசி அதற்கான தகவல்களை சேகரித்துக் கொண்டு இருக்கிறேன் என்கிறார் பேராசிரியர் சித்தி ஜீனத் நிஷா.
– தனுஜா ஜெயராமன்

Related posts

ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிக்கு இந்திய வீரர் லக்ஷயா சென் முன்னேற்றம்!

சென்னையில் ரூ.10.85 கோடியில் புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2013 முதல் 2022ம் ஆண்டு வரை வெப்ப அலையால் 10,617 பேர் பலி: கடந்த 80 ஆண்டை காட்டிலும் இந்தாண்டு வெயில் அதிகம்