நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் மக்களவை தேர்தலில் போட்டி: ஒன்றிய கனிமவளத்துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷி தகவல்

பெங்களூரு: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் போட்டியிடுவார்கள். எந்த தொகுதி என்பது விரைவில் தெரியும் என்று ஒன்றிய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷி தெரிவித்தார். இதுகுறித்து ஹூப்பள்ளி மாநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் கெட்ட பொருளாதார கொள்கையால், அரசின் நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளது. மாநிலத்தில் கடும் வறட்சி நிலவும் சமயத்திலும் நிவாரண நிதி வழங்குவதற்கு கூட அரசிடம் பணமில்லாமல், அவமதிப்பட்டு வருகிறது. அரசு பணமில்லாமல் திவாலாகி உள்ளது என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அரசு எந்தவிதமான பொருளாதார நெருக்கடியிலும் சிக்கவில்லை என்று முதல்வர் சித்தராமையா மழுப்பி வருகிறார்.

மக்களவை தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். மண்டியா தொகுதியில் வேட்பாளர் நிறுத்துவது தொடர்பாக எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் கிடையாது. யாரை களத்தில் நிறுத்துவது என்பதை தீர்மானித்துள்ளோம். சாமானியமாக ஒரு வீட்டில் ஏற்படும் பிரச்னையை தீர்ப்பதற்கு பல வழிகளில் முயற்சித்து வரும்போது, நூற்றுக்கணக்கான தலைவர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் கட்சியில் உடன்பாடு எட்டுவதற்கு காலதாமதம் ஏற்படுவது இயல்பானது தான். மக்களவை தேர்தலில் கட்சி சார்பில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை களத்தில் நிறுத்த கட்சி முடிவு செய்துள்ளது. அவர்கள் இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விருப்பம் கட்சி தலைமைக்கு உள்ளது. இருவரும் கர்நாடக மாநிலத்தில் போட்டியிடுவார்களா? அல்லது வேறு மாநிலத்தில் போட்டியிடுவார்களா? என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு