Friday, September 20, 2024
Home » நாட்டையே உலுக்கிய நிர்பயா 2: பெண் டாக்டரை சிதைத்த காவல் நண்பன்; கொல்கத்தா அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரம்

நாட்டையே உலுக்கிய நிர்பயா 2: பெண் டாக்டரை சிதைத்த காவல் நண்பன்; கொல்கத்தா அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரம்

by Karthik Yash

2012 டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் 22 வயது இளம்பெண் ஓடும் பஸ்சில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நிர்பயா என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த வழக்கு நாட்டையே உலுக்கியது.
12 ஆண்டுகள் கழித்து கொல்கத்தா ஆர்ஜிகர் மருத்துவமனையில் ஆக.9ம் தேதி முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டு இருப்பது மீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவையும் கொந்தளிக்க வைத்து இருக்கிறது.

இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவு நன்றாக படித்தாலும் மருத்துவ சீட் வாங்குவது கடினம். அதற்கு நீட் தேர்வில் பாஸ் செய்ய வேண்டும். அதிலும் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் 5 ஆண்டுகள் முடித்தாலும், முதுகலை மருத்துவம் படிக்க மேலும் ஒரு நீட் தேர்வு எழுத வேண்டும். அதிலும் இப்போது குறிப்பிட்ட ஒருசாரார் நலனுக்காக ஜீரோ மார்க் விதி எல்லாம் இந்த மோடி அரசு விதித்து இருக்கிறது. இந்த தடைகளை எல்லாம் தாண்டி ஒரு பெண் முதுகலை மருத்துவம் படிப்பது என்பது எவ்வளவு கடினம் என்பது மருத்துவத்துறையில் உள்ள ஒவ்வொருவருக்கும் புரியும். ஏனென்றால் அவர்களுக்கான பணி வாழ்க்கை அப்படி.

தொடர்ந்து 36 மணி நேரம் பணியாற்ற வேண்டும். கிடைக்கும் நேரத்தில் ஓய்வு, கிடைத்த உணவை சாப்பிட்டு பணி செய்வதோடு மட்டுமல்லாமல், படிக்கவும் வேண்டும். அவர்களுக்கு என்று முறையான தங்கும் வசதி, உணவு எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட சூழலில் அரசு மருத்துவக்கல்லூரியில் முதுகலை படிக்கும் பெண் மருத்துவர், பணி செய்யச்சென்ற இடத்தில் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருப்பது அத்தனை மருத்துவர்களையும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி விட்டது.

36 மணி நேரப் பணிக்குப் பிறகு அந்த 31 வயது பெண் டாக்டருக்கு அந்த நாள் ஒரு சாதாரண வெள்ளிக்கிழமை அதிகாலையாக விடிந்திருக்கலாம். ஆனால்… கொல்கத்தாவின் வடக்குப் புறநகரில் உள்ள ஒரு சிறிய ஆடை வியாபாரியின் ஒரே மகள் அவர். ஆர்ஜி கர் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள மார்பு மற்றும் நுரையீரல் சிகிச்சை வார்டில் 36 மணிநேரம் பணியில் இருந்தார். கடைசியாக ஆகஸ்ட் 8 அன்று இரவு 11.30 மணியளவில் தனது தாயிடம் பேசினார். இரவு உணவிற்கு முன் இது ஒரு வழக்கமான போன் அழைப்புதான்.

அதற்கு முன்பு இரவு 10.30 மணியளவில், காதலனிடம் இருந்து அழைப்பு. நோயாளிகளைப் பார்க்கும் அவசரத்தில் இருந்ததால் ஒரு சில வினாடிகளுக்கு மேல் பேச முடியவில்லை. அதன்பின் ஆன்லைன் டெலிவரி ஆப் மூலம் உணவை ஆர்டர் செய்தார். நள்ளிரவு 12 மணியளவில் ஒரு பயிற்சி மருத்துவர், ஒரு உதவியாளர், 2 முதுகலை மருத்துவர்களுடன் இணைந்து இரவு உணவு சாப்பிட கருத்தரங்கு அறைக்குச் சென்றார். ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிதல் போட்டியை அவர்கள் ரசித்தபடி உண்டு முடித்தனர். அதிகாலை 1.30 மணியளவில் மற்றவர்கள் வெளியேற, பூட்டு இல்லாத அந்த கருத்தரங்கு அறையில் தூங்க பெண் மருத்துவர் முடிவெடுத்தார்.

ஏனெனில் இரவு-ஷிப்டில் உள்ள பெண் மருத்துவர்கள் ஓய்வெடுக்க அந்த அறையைத்தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு வேறு ஓய்வறை இல்லை. அவரிடம் அதிகாலை 3 மணி அளவில் ஒரு பயிற்சி மருத்துவர் நோயாளியின் ரிப்போர்ட்டைக் காட்ட வந்தபோது, ​​​​ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவர், அதை வேறு மருத்துவரிடம் காட்டச் சொன்னார். அந்த பயிற்சி மருத்துவர்தான் அவரை கடைசியாக உயிரோடு பார்த்தவர். ஆக.9ம் தேதி காலை 9.30 மணியளவில், மார்பு மற்றும் நுரையீரல் சிகிச்சை வார்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் கருத்தரங்கு அறைக்கு செல்கிறார். அவர் தான் பெண் மருத்துவரை பார்க்கிறார்.

அரை நிர்வாணமாக கொடூரமான முறையில் அவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு திகைக்கிறார். உடனடியாக சக மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறார். அடுத்தடுத்து போலீஸ் உள்பட அத்தனை பேரும் வருகிறார்கள். அந்த கருத்தரங்க அறை 40×30 அடி கொண்டது. 50 இருக்கைகள் உள்ளன. அறைக்கு உள்ளே சிசிடிவி கிடையாது. முதலில் மருத்துவமனை புறக்காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார்தான் சம்பவ இடத்துக்குச் சென்று 2 பெண் மருத்துவர்கள் முன்பு விசாரித்தனர். பின்னர் தல்லா காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். விஷயம் பற்றிக்கொண்டது.

உயர் அதிகாரிகள் வந்தனர். தடயவியல் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் காலை 11.30 மணியளவில் வந்தனர். சடலத்தின் அருகே ப்ளூடூத் இயர்போன் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பான வழக்கு முதலில் உள்ளூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பலாத்காரம் மற்றும் கொலை வழக்காக மாற்றப்பட்டது. போலீசார் சிசிடிவி காட்சிகளை சேகரித்து மருத்துவமனை அறைக்குள் 15 கணினி திரைகளை அமைத்து காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இரவுப் பணியில் இருந்த 5 பேர் தனித்தனியாகப் பிரித்து விசாரிக்கப்பட்டனர். 5 பேரின் வாக்குமூலங்களும் ஒரே மாதிரியாக இருந்தன. இதனால் மீண்டும் சிசிடிவி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ​​ஷார்ட்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் டி-ஷர்ட் அணிந்த ஒரு நபர் சிக்கினார். அவர் மூன்றாவது மாடியில் உள்ள நடைபாதையில் ப்ளூடூத் இயக்கப்பட்ட இயர்போனை தோளில் தொங்க விட்டபடி அதிகாலை 4 மணி அளவில் கருத்தரங்கு அறை நோக்கி நடந்து சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் வெளியே வந்தார். ஆனால் இந்த முறை அவரது தோளில் இயர்போன் காணப்படவில்லை.

மருத்துவமனை புறக்காவல் நிலையத்தின் காவலர் ஒருவர் தான் சிசிடிவியில் சிக்கிய நபர் தான் சஞ்சய் ராய் என்று அடையாளம் காட்டினார். அவர் மருத்துவமனைக்கு அடிக்கடி வரும் போலீஸ் தன்னார்வலர். அவர் செல்போன் எண் அங்கு இருந்த அனைவரிடமும் இருந்தது. அவர் சால்ட் லேக்கில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் இருப்பதை அவரது செல்போன் சிக்னல் காட்டியது. அங்கு உடனடியாக சென்ற போலீசார் அவரை அள்ளிக்கொண்டு வந்தனர். பிற்பகலில் அவரிடம் விசாரணை தொடங்கியது. ​​சஞ்சய் தனக்குத் தெரிந்த நோயாளிகளில் ஒருவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றதாகக் கூறினார்.

யார் அந்த நோயாளி என்று கேட்ட போது அவரால் நோயாளியை அடையாளம் காண முடியவில்லை. அவரது இயர்போன் எங்கே என்று கேட்டபோது, ​​அதை தொலைத்துவிட்டதாக கூறினார். அதன் பிறகு அவரது செல்போனின் ப்ளூடூத் ஆப்ஷனை ஆன் செய்து போலீசார் பார்த்த போது, செமினார் அறையில் இருந்த இயர்போனுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். தடயவியல் நிபுணர்கள் பெண் மருத்துவரின் விரல் நகங்களிலிருந்து தோல் மாதிரிகளை சேகரித்து பார்த்த போது அது சஞ்சய் ராய்க்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. மேலும் சஞ்சயின் உடலில் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தங்கள் மகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் முதலில் கூறியதாகவும், பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர். ஆகஸ்ட் 9ம் தேதி காலை 10.53 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது. அழைப்பாளர் தன்னை மருத்துவமனையின் உதவி கண்காணிப்பாளர் என்று கூறினார். எங்கள் மகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவர் எங்களுக்குத் தெரிவித்தார்.

ஏறக்குறைய 22 நிமிடங்களுக்குப் பிறகு, சுமார் 11.15 மணியளவில், அவர் மீண்டும் அழைத்து எங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்தார். நாங்கள் மருத்துவமனைக்கு சென்ற பிறகும் எங்கள் மகள் உடலைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. மூன்று மணி நேரம் காத்திருக்க வைத்தனர் என்று குற்றம் சாட்டினர். இதற்கிடையில் பெண் மருத்துவர் கொலை நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மத்தியில் உணர்ச்சிப்பூர்வ கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. உடனடியாக ஆர்ஜி கர் மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷ் இடமாற்றம் செய்யப்பட்டார்.

அவர் கொல்கத்தா தேசியமருத்துவமனை மற்றும் மருத்துவகல்லூரியின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டார். அன்றே அவர் பணியில் சேர்ந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சஞ்சய் ராயை உடனே கைது செய்துவிட்டோம். ஆக.18 வரை அவகாசம் கொடுங்கள். இந்த வழக்கை முடித்துவிடுகிறோம். இல்லை என்றால் சிபிஐ வசம் ஒப்படைக்க எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று ஆக.12ல் கூறினார் முதல்வர் மம்தா. ஆனால் பிரச்னை முற்றிவிட்டது. கொல்கத்தா உயர் நீதிமன்றமே வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து நடந்த சம்பவங்கள் தான் இந்த கொடூர சம்பவத்தின் போக்கையே மாற்றி விட்டது. பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட கருத்தரங்கு அமைந்த இடத்தின் அருகில் உள்ள கட்டிடத்தை இடித்து உடைத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதே போல் ஆக.14ம் தேதி நள்ளிரவு சுதந்திர தின விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது சுமார் 400 பேர் திரண்டு மருத்துவமனைக்குள் நுழைந்து முக்கிய பகுதிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

கொலை நடந்த கருத்தரங்கு அறை மூன்றாவது மாடியில் உள்ளது. அதற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. ஆனாலும், அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் கூடுதல் சந்தேகங்களை ஏற்படுத்த சிக்கல் மேல் சிக்கல் அதிகரித்து விட்டது. 2012ல் நிர்பயா பலாத்கார கொலை வழக்கு மத்தியில் மன்மோகன்சிங் அரசை காலி செய்த முதல் அம்பாக மாறியது. இன்று கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு நாட்டில் உள்ள ஒரே ஒரு பெண் முதல்வர் மம்தாவின் பதவிக்கு ஆபத்தாக அமைந்து இருக்கிறது.

* போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொல்கிறது?
முதற்கட்டமாக பெண்டாக்டரின் மூச்சை நிறுத்த முகத்தை தலையணையை வைத்து அழுத்தி, கழுத்தை நெரித்ததால் மரணம் ஏற்பட்டுள்ளது. பெண் டாக்டர் கத்துவதைத் தடுக்க வாய் மற்றும் தொண்டை தொடர்ந்து அழுத்தப்பட்டது. மூச்சுத் திணற தொண்டை நெரிக்கப்பட்டது. கழுத்தை நெரித்ததால் தைராய்டு குருத்தெலும்பு உடைந்தது. முகம், கண்கள் மற்றும் முகத்தில் ரத்தக் கறைகளும், உடலின் பல்வேறு இடங்களில் கீறல்களும், ரத்தக் கறைகளும் இருந்தன. பெண் டாக்டரின் அந்தரங்க பாகங்களில் இருந்து ரத்தம் வழிந்தது. உதடுகள், வயிறு, வலது கை மற்றும் விரல்களில் காயங்கள் இருந்தன.

பெண் மருத்துவரின் முகக்கண்ணாடி உடைந்து இரண்டு கண்களிலும் ரத்தம் வழிந்த நிலையில் இருந்தது. எலும்புகள் எதுவும் உடையவில்லை. உடலில் 16 வெளிப்புற காயங்கள் உள்ளன. கன்னங்கள், உதடுகள், மூக்கு, கழுத்து, கைகள், முழங்கால்களில் சிராய்ப்புகள், அந்தரங்க பாகங்களில் காயங்கள் உள்ளன. கழுத்து, உச்சந்தலை மற்றும் பிற பகுதிகளின் தசைகளில் 9 உள் காயங்கள் உள்ளன. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆர் ஜி கர் மருத்துவக் கல்லூரியின் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் துறை பேராசிரியர் அபுர்பா பிஸ்வாஸ், இணை பேராசிரியர் ரினா தாஸ், உதவி பேராசிரியர் மோலி பானர்ஜி ஆகியோர் கையெழுத்திட்டு இருந்தனர்.

* 4 மணி நேரத்தில் புதிய போஸ்ட் வாங்கிய கல்லூரி முதல்வர்
பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட ஆர்ஜி கர் மருத்துவமனை முதல்வராக இருந்தவர் சந்தீப்கோஷ். 1994ல் ஆர்ஜி கர் மருத்துவமனையில் தான் மருத்துவம் படித்து முடித்துள்ளார். கொல்கத்தா தேசிய மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அங்கு துணை முதல்வராகவும் இருந்தார். 2021ல் ஆர்ஜி கர் மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டார். 16வது இடத்தில் இருந்த அவர் அனைத்து சீனியர்களையும் தாண்டி அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டது அந்த நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது பெண் மருத்துவர் படுகொலைக்கு பின்னரும் அடுத்த 4 மணி நேரத்தில் கொல்கத்தா தேசிய மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டார். உடனடியாக அங்கு சென்று பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் பெண் மருத்துவர் படுகொலை போராட்டம் பெரிய அளவில் வெடித்ததால் 2 நாளில் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவரை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

* டிஎன்ஏ சோதனையில் உறுதி
பெண் டாக்டரின் நகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் மற்றும் தோல் ஆகியவை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவை கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயின் டிஎன்ஏ உடன் சரியாகப் பொருந்தியுள்ளது. சஞ்சய் ராயை எதிர்த்து பெண் டாக்டர் போராடிய போது ஏற்பட்ட காயங்கள் தான் இப்போது சஞ்சய் ராயை சிக்க வைத்துள்ளது.

* யார் இந்த சஞ்சய் ராய்?
சஞ்சய் ராய் யார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தாய் மற்றும் 2 சகோதரிகளுடன் பிறந்தவர். மூத்த சகோதரி கொல்கத்தா காவல்துறையில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். அவரது தங்கை ஒரு போலீஸ் தன்னார்வலராக உள்ளார். சஞ்சய்ராய் நடத்தை முதலில் இருந்தே சரியில்லை. ‘நான் அவரைப் பற்றி பேச விரும்பவில்லை. அவர் எங்கள் குடும்ப வரலாற்றில் ஒரு கறை. அவரைப் பற்றி ஒரு நல்ல குணத்தையும் என்னால் குறிப்பிட முடியாது. அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால், நாங்கள் அவரது உடலை எடுக்க செல்ல மாட்டோம்’ என்று தெற்கு கொல்கத்தாவில் உள்ள பவானிபூரில் வசிக்கும் சஞ்சய் ராயின் ஏஎஸ்ஐ சகோதரி தெரிவித்தார் என்றால், அவரது பழக்கவழக்கத்தை புரிந்து கொள்ளலாம். மேலும் அதிகமாக குடிக்கும் பழக்கம் உடையவர்.

2019ம் ஆண்டு கொல்கத்தா காவல்துறையில் தன்னார்வலராக சேர்ந்தார். கொல்கத்தா காவல்துறையில் பல அதிகாரிகளுடன் நெருங்கிப் பழகினார். அதன்பின் காவல்துறை நல வாரியத்தில் இணைக்கப்பட்டார். இதன் மூலம் அவர்களது குடும்பத்தினரின் மருத்துவ தேவைகளுக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வார். போலீஸ் தரப்பில் இருந்து வருவதால் மருத்துவமனையில் அதிக செல்வாக்குடன் இருந்தார். நர்ஸ், டாக்டர்களின் ஷிப்ட்டுகளை மாற்றி அமைக்கக்கூடிய அளவுக்கு அதிகாரம் பெற்று இருந்ததாகவும், அதன் மூலம் பல பெண் நர்ஸ்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 2022ம் ஆண்டில், சஞ்சயின் கர்ப்பிணி மனைவி, காளிகாட் காவல் நிலையத்தில் தன்னை அடித்ததாகக் கூறி அவர் மீது புகார் அளித்தார், ஆனால் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சஞ்சய் மனைவி கடந்த ஆண்டு இறந்தார்.

பரவும் வதந்திகள்
1. பெண் மருத்துவரின் உடலில் இருந்து 150 கிராம் விந்தணுக்கள் கிடைத்ததாகவும், அதில் 3 பேரின் விந்தணுக்கள் இருந்ததாகவும் தகவல் பரவியது. இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘விந்துவை வேறுபடுத்துவது சாத்தியமில்லை. மேலும் 150 கிராம் கிடைத்ததாக போலீசார் எங்கேயும் தெரிவிக்கவில்லை’ என்றார்.
2. பெண் மருத்துவரின் கழுத்து எலும்பு மற்றும் இடுப்பு எலும்பு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பெண் மருத்துவருக்கு எந்தவித எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
3. பெண் மருத்துவர் தற்கொலை செய்ததாக அவரது பெற்றோருக்கு போலீசார் தெரிவித்ததாக தகவல் வெளியானது. ஆனால் மருத்துவமனையில் இருந்துதான் தகவல் வந்தது. போலீசார் அழைக்கவில்லை என்று பெற்றோர் உறுதிப்படுத்தினர்.

* நடந்தது என்ன?
ஆக.8: நள்ளிரவு 12 மணி: சக மருத்துவர்களுடன் சாப்பிட கருத்தரங்கு அறை சென்றார் பெண் மருத்துவர்.
ஆக.9: அதிகாலை 1.30: சக மருத்துவர்கள் வெளியேற, அங்கேயே படுத்து தூங்குகிறார்.
அதிகாலை 3: மருத்துவ அறிக்கையை காட்ட பயிற்சி மருத்துவர் வந்து பெண் மருத்துவரை எழுப்புகிறார்.
காலை 9 மணி: பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை பார்க்கிறார் சக மருத்துவர்.
காலை 9.30: மருத்துவமனை உதவிக் கண்காணிப்பாளர் பெண் மருத்துவரின் பெற்றோரை அழைத்து தகவல் தெரிவிக்கிறார்.
காலை 10.10: ஆர்.ஜி கார் மருத்துவமனை போலீசார் உஷார் படுத்தப்படுகிறார்கள்.
காலை 10.30: தல்லா காவல் நிலையம் மூலம் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.
காலை 11.30 மணி: கூடுதல் போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மதியம் 1.00 மணி: ஒரு தடயவியல் குழு குற்றம் நடந்த கருத்தரங்கு அறையை ஆய்வு செய்கிறது.
மதியம் 1.10 மணி: கருத்தரங்கு அறைக்கு பெற்றோருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மாலை 4.20: நீதித்துறை மாஜிஸ்திரேட் விசாரணையை நடத்துகிறார். விசாரணை அறிக்கையில் பெண்ணின் தாயார் கையெழுத்திட்டார்.
மாலை 5.30: உடல் பிரேதப் பரிசோதனைக்காக வெளியே எடுக்கப்பட்டது.
மாலை 6.10 முதல் 7.10 வரை: பிரேத பரிசோதனை முடிந்தது.

You may also like

Leave a Comment

1 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi