நீலகிரியில் முதன்முறையாக மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக ஊட்டியைச் சேர்ந்த பெண் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டது. ஊட்டி மேரிஸ் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் கில்பர்ட். இவரது தாயார் எமிலி லாரன்ஸ் (62). இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கை, கால்கள் செயல்படாத நிலையில் பேச்சும் இல்லாமல் கோமா நிலைக்குச் சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை ஊட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு நேற்று முன்தினம் வரை அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சையில் எந்த பலனும் அளிக்காத நிலையில், தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் எமிலிக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, எமிலியை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கும் அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் அடையாத நிலையில், எமிலியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று இரவு எமிலியின் கல்லீரல், கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டது. மருத்துவர்கள் அடங்கிய குழு ஊட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை முடிந்த பின் அவரது உடல் உறுப்புகள் கோவையில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

எமிலியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய அவரது மகன் மற்றும் மகள்களுக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா நன்றி தெரிவித்தார். உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலுக்கு கலெக்டர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஒருவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதும், மூளைசாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டதும் நீலகிரி மாவட்டத்தில் இது முதல் முறையாகும்.

Related posts

கூல் லிப் பயன்பாடு: 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பழனி பஞ்சாமிர்தம் காலாவதி தேதி 30 நாட்களாக உயர்வு..!!

SIPCOT-ல் அமையும் கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை!