வயநாடு, நீலகிரி பகுதிகளில் மிக கனமழை தொடரும்: பிரதீப் ஜான்

சென்னை: வயநாடு, நீலகிரி பகுதிகளில் மிக கனமழை தொடரும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சிக்மகளூர், ஹாசன் மாவட்டங்களிலும் கனமழை பெய்வதால் ஹேமாவதி அணை ஒரு வாரத்தில் நிரம்ப வாய்ப்பு உள்ளது. ஹாரங்கி அணை 80 சதவீதம் நிரம்பிய நிலையில் வினாடிக்கு 19,000 கனஅடி உபரி நீர் கே.ஆர்.எஸ். அணைக்கு திறக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 36,000 கனஅடியாக உள்ள நிலையில் நீர் திறப்பு 2500 கனஅடியாக உள்ளது.

குடகு மாவட்டத்தில் தலகாவேரி, பாகமண்டலா பகுதிகளில் கனமழை தொடர்வதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 45,000 கனஅடியாக உயர வாய்ப்பு உள்ளது. ஹாரங்கி அணையும் நிரம்பியதால் அதன் உபரிநீரும் கே.ஆர்.எஸ். அணைக்கு வர வாய்ப்பு உள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியாக உள்ள நிலையில் நீர் வெளியேற்றம் 36,000 கனஅடியாக உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

கபினி அணை ஏற்கனவே நிரம்பியுள்ளதால் மேலும் அதிக அளவில் காவிரியில் உபரி நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேட்டூர் அணைக்கு நாளை வினாடிக்கு 35,000 முதல் 40,000 கனஅடி வரை நீர்வரத்துக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். வயநாடு, நீலகிரி பகுதிகளில் மிக கனமழை தொடரும். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மேலும் சில நாட்கள் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

Related posts

ஹெலிகாப்டர் திருட்டு: உ.பி.பாஜ அரசை சாடும் அகிலேஷ் யாதவ்

MVA-BN என்ற குரங்கம்மை தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசர கால அனுமதி

2வது திருமணம் செய்து உதாசீனம்: கணவர் வீடு முன் குழந்தைகளுடன் மனைவி தர்ணா