நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு: 6ம் தேதி வரை மழை நீடிக்கும்


சென்னை: மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளாவில் பெரும் மழை பெய்து சேதத்தை விளைவித்துள்ளது. அங்கு இன்னும் மழை நீடித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டிலும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அனேக இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நேற்று பெய்துள்ளது.

குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டதால் அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. அதன்படி அந்த மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. அத்துடன் திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு நீடித்து வருவதால் தமிழ்நாட்டில் இன்றும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 6ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகள், வடக்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்றும் நாளையும் வீசும். மத்திய கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 55 கிமீ வேகத்தல் 2ம் தேதியும் வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related posts

தேனியில் டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழப்பு

செப் 09: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

சொல்லிட்டாங்க…