நீலகிரி வனங்களை அழிக்கும் பாலிகானம் மோலே களை செடிகளை அகற்ற கோரிக்கை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் காடுகளில் பல்வேறு அரிய வகை தாவரங்கள், மரங்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1840களில் எரிபொருள் தேவைக்காக கற்பூரம், சீகை, பைன் போன்ற வெளிநாட்டு மர வகைகளையும், லேண்டானா, கார்ஸ், செஸ்ட்ரம், ஸ்காட்ச்புரூம் உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு தாவரங்கள் நடவு செய்யப்பட்டன. தற்போது, நீலகிரியில் இவை சுமார் 15 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் வளர்ந்துள்ளன. இதனால், நீலகிரிக்கே உரித்தான தாவரங்கள் அழியத் துவங்கின. காட்டின் வளத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து பல்லுயிர் பெருக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவை நிலத்தடி நீர்மட்டத்தையும், மழை பொழிவையும் வெகுவாக பாதிக்கின்றன.

மேலும், வெளிநாட்டு தாவரங்களின் ஆக்கிரமித்தால் விலங்குகளின் வாழ்விடம் சுருங்கின. விலங்குகளுக்கு உணவான புற்கள், செடி கொடிகள் வளர வழியில்லாமல் அழிந்தன. இதனால், தாவர உன்னிகளுக்கு உணவு பற்றக்குறை ஏற்படுகிறது.இச்சூழலில் பாலிகானம் மோலே எனப்படும் இமாலயன் முடிச்சு செடிகள் அப்பர் நீலகிரி எனப்படும் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான கோடப்பமந்து, கோடப்பமந்து கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகள், காந்திநகர் பகுதியில் உள்ள ஓடை, ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா பகுதி, ஆடாசோலை உள்ளிட்ட பல பகுதிகளில் வனங்கள் மற்றும் நீர்நிலைகள், சாலையோரங்களில் பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால், வன வளம் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக தாவரவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து காட்டுயிர் ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘இமய மலையை தாயகமாக கொண்ட பாலிகானம் மோலே. இமய மலை முடிச்சி செடி என அழைக்கப்படுகிறது. அழகு தாவரமாக நீலகிரிக்கு கொண்டு வரப்பட்ட இந்த தாவரம் இன்று வன வளத்தை கடுமையாக பாதிக்கும் அளவிற்கு பரவி வருகிறது. கொத்தாக உள்ள பூக்களில் ஆயிரக்கணக்கான விதைகள் காற்றில் பரவுகிறது. நீர் நிலைகள், ஓடைகள், ஆறுகள் போன்றவற்றை ஆக்கிரமித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவற்றை உடனடியாக அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது. இவற்றை அகற்றுவது மிக கடினமான பணி. அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும்’’ என்றார்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்