பாரிமுனையில் கடை, தங்கும் விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை: கணக்கில் வராத ரூ.30 லட்சம் பறிமுதல்

தண்டையார்பேட்டை: கேரளாவில் போதை பொருள் மற்றும் அதிநவீன துப்பாக்கி பறிமுதல் எதிரொலியாக, சென்னை பாரிமுனையில் கடை மற்றும் தங்கும் விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ.30 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரள மாநிலம் கொச்சியில் அதிகளவு போதை பொருள் மற்றும் அதிநவீன துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் (என்ஐஏ) நேற்று மாலை 4 மணி அளவில், சென்னை பாரிமுனை, பர்மா பஜார் அடுத்துள்ள ஈவினிங் பஜாரில் கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது, முகமது இலியாஸ் என்பவரின் கடையில் இருந்து கணக்கில் வராத ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

இதுபோல் மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள கிரீன்பேலஸ், ஆப்பிள் பேலஸ் மற்றும் தம்புச்செட்டி தெருவில் உள்ள ஆரஞ்சு பேலஸ் ஆகிய தங்கும் விடுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த விடுதிகளிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. என்ஐஏ அதிகாரிகளின் திடீர் சோதனையால் மேற்கண்ட பகுதிகளில் பரபரப்பு நிலவியது. இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை 8 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடத்தப்பட்டது. விழாவில் கலந்துகொள்ள நாளை பிரதமர் மோடி தமிழகம் வரும்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் பாரிமுனையில் நடத்தப்பட்ட சோதனையால் பரபரப்பு நிலவியது.

Related posts

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்

கூட்டுறவுகள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகின்றன என்ற கருத்தில் சர்வதேச கூட்டுறவு தினம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பொது சுகாதாரதுறை உத்தரவு