வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வழக்கு தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: தஞ்சாவூரில் உபா சட்டத்தில் 2 பேர் கைது

சென்னை: வெளிநாட்டில் உள்ள தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வழக்கில், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு சொந்தமான சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 இடங்களில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதுதொடர்பாக தஞ்சாவூரில் உபா சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பான செல்போன், பென் டிரைவ், சிம்கார்டு, டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

சமூக வலைத்தளங்கள் மூலம் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சிலர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக சென்னை பெருநகர காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி, இந்தியா இணையாண்மைக்கு எதிராக பல்வேறு வீடியோக்களை சிலர் வெளியிட்டு பிரசாரம் செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் ஹமீது உசேன், ராயப்பேட்டை, ஜானி ஜஹான்கான் தெருவில் தனியார் அறக்கட்டளை ஒன்றை நடத்தி அதன் மூலம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரகசிய கூட்டங்கள் நடந்தி வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து ஹமீது உசேன் மற்றும் அவரது தந்தை அகமது மன்சூர், அவரது சகோதரர் அப்துல் ரகுமான் ஆகிய 3 பேரும் உபா சட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முக்கிய குற்றவாளி என கருதப்படும் ஹமீது உசேன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்ததும், அதன் பிறகு அந்த பணியை விட்டுவிட்டு, இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான ‘ஹிஷாப் உத் தஹீரிர்’ என்ற பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து, அந்த அமைப்புக்கு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக ரகசிய கூட்டங்கள் மற்றும் சொற்பொழிவுகள் நடத்தி ஆட்களை சேர்த்து வந்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் ஹமீது உசேனுக்கு உதவியாக இருந்ததாக முகமது மாரிஸ் (36), காதர் நவாஸ்ரீ (எ) ஜாவித் (35), அகமது அலி உமாரி (46) ஆகிய 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதேநேரம் கைது செய்யப்பட்ட 6 பேரும் இந்திய இறையாண்மைக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்ததால் சென்னை மாநகர காவல்துறையில் இருந்த இந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.

இதனால் ஹமீது உசேன் மற்றும் அவரது தந்தை அகமது மன்சூர், அவரது சகோதரர் அப்துல் ரகுமான் மற்றும் முகமது மாரிஸ், காதர் நவாஸ்ரீ (எ) ஜாவித், அகமது அலி உமாரி ஆகிய 6 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர்கள் அளித்த தகவலின்பேரில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை ஒரே நேரத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் நேரடியாக தொடர்பில் இருந்த நபர்களுக்கு சொந்தமான சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 10 இடங்களில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, சென்னை ராயப்பேட்டையில் முக்கிய குற்றவாளியான ஹமீது உசேன் மற்றும் அவரது தொடர்புடைய இடம், சென்னையை அடுத்த பீர்க்கங்கரணை காவல் நிலையத்திற்கு உட்பட்ட முடிச்சூர் மின்வாரிய காலனியில் உள்ள கபீர் அகமதுவின் (40) வீடு ஆகியவற்றில் என்ஐஏ டிஎஸ்பி குமரன் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் பிற்பகல் வரை சோதனையில் ஈடுபட்டனர். இதில் செல்போன்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் என்ஐஏ டிஎஸ்பி ராஜன் தலைமையிலான அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து நேற்று காலை 6 மணிக்கு, தஞ்சை குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது என்பவரின் வீட்டுக்குச் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு அகமது குடும்பத்தினரிடம் சில ஆவணங்களை காட்டி விசாரணை நடத்தினர். மற்றொரு குழு அய்யம்பேட்டை மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரின் வீடு, சாலியமங்கலத்தில் உள்ள முஜிபுர் ரகுமான், சாலியமங்கலம் காந்திஜி சாலையில் உள்ள அப்துல் காதர், காதர் மொய்தீன் ஆகிய 4 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தியது.

தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் அகமதுவின் வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை 11.30 மணிக்கு நிறைவடைந்தது. இங்கு ஆவணங்கள் எதுவும்‌ கைப்பற்றப்படவில்லை. இதேபோல் மானாங்கோரையில் ஷேக்அலாவுதீனின் வீட்டில் ஆய்வாளர் அருண் மகேஷ் தலைமையில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய சோதனை 11.30 மணிக்கு நிறைவடைந்து. சோதனையின் நிறைவில் லேப்டாப், பென் டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

சாலியமங்கலத்தில் முஜிபுர் ரஹ்மான், அப்துல் ரகுமான் ஆகிய 2 பேர் வீடுகளில் ஏடிஎஸ்பி நாகராஜன் தலைமையில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை நண்பகலில் நிறைவடைந்தது. இதில் பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக முஜிபுர் ரஹ்மான், அப்துல் ரகுமான் ஆகியோர் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு உடந்தையாகவும், கூட்டுச்சதியிலும் ஈடுபட்டதாக கூறி உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும், திருச்சியை சேர்ந்த சபியுல்லா என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்த மண்டையூர் வடகாடு கிராமத்தில் 10 ஏக்கர் தோட்டம் வைத்துள்ளார். இந்த தோட்டத்தில் தஞ்சை சாலியமங்கலத்தை சேர்ந்த அப்துல் காதர்(55), இரண்டு ஆண்டுகளாக தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அப்துல் காதர் தங்கியுள்ள தோட்டத்து வீட்டில் விஷ்ணு சங்கர் தலைமையிலான என்ஐஏவை சேர்ந்த 4 அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

4 மணி நேரம் நடந்த சோதனையில் அப்துல் காதர் வீட்டிலிருந்து ஒரு செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் திருச்சி சுப்பிரமணியபுரம் பெரியார் தெருவில் வசித்து வரும் அப்துல் காதர் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் வரை சோதனை நடத்தினர். அப்போது வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அப்துல் காதர், அவரது மகன் அப்துல் ரகுமான் ஆகிய 2 பேரை விசாரணைக்காக என்ஐஏ அதிகாரிகள் தங்களுடன் அழைத்து சென்றனர்.

ஈரோட்டில் பெரியார் நகர், கருப்பண்ணசாமி கோயில் வீதியில் வசித்து வரும் முகமது இசாக் (45) என்பவரது வீட்டிற்கு நேற்று காலை கொச்சியில் இருந்து என்ஐஏ இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். பைக் மெக்கானிக்காக வேலை செய்து வரும் அவர், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பிரசாரம் மேற்கொண்டதற்கான ஆவணங்கள் அடங்கிய 2 பென் டிரைவ், ஒரு செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து பைக் மெக்கானிக் முகமது இசாக், நாளை சென்னையில் என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அளிக்கப்பட்டது. இதேபோல் ஈரோடு அடுத்த மூலப்பாளையம் அசோக் நகர் 6வது தெருவை சேர்ந்த சர்புதீன் (40) என்பவரது வீட்டிலும் சென்னையில் இருந்து வந்த என்ஐஏ இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தி செல்போன், வழக்கு தொடர்பான புகைப்படம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

ஆக, சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, ஈரோடு, தஞ்சை என தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 10 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சிம்கார்டுகள், டிஜிட்டல் ஆவணங்கள், வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுடனான தொடர்பு பொருட்கள், செல்போன்கள் என ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடந்து வருவதால், முழுமையான விவரங்கள் பின்னர்தான் தெரிவிக்கப்படும் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்ந்த விவகாரம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து 10 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்திய சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, ஈரோடு, தஞ்சை என தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 10 இடங்களில் சோதனை நடந்தது.

* சிம்கார்டுகள், டிஜிட்டல் ஆவணங்கள், வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுடனான தொடர்பு பொருட்கள் .பறிமுதல் செய்யப்பட்டது.

* சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடந்து வருவதால், முழுமையான விவரங்கள் பின்னர்தான் தெரிவிக்கப்படும் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு