பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு; தமிழகம் முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை: பென்டிரைவ், செல்போன்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: கடந்த 2019ம் ஆண்டு பாமக நிர்வாகி ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, என்ஐஏ அதிகாரிகள் தஞ்சை உட்பட தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் ேநற்று சோதனை நடத்தினர். இதில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் 6 பேர் தொடர்பான ெபன் டிரைவ், செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கின. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருபுவனம் அடுத்த மேலத்தூண்டில் விநாயகம்பேட்டையை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் (45), மதமாற்றங்களை தடுத்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், கடந்த 2019 பிப்ரவரி 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் புலனாய்வுக்கு பிறகு 18 பேர் குற்றவாளிகளாக கருதப்பட்டு, அதில் திருபுவனத்தை சேர்ந்த நிசாம் அலி, குறிச்சிமலை பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், சர்புதீன் முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரை சேர்நத் ஆசாருதீன் என 13 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதில் 2 பேர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் மீதமுள்ள 11 பேர் சிறையில் உள்ளனர்.

இதற்கிடையே தலைமறைவாக உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் 6 பேரை புகைப்படங்களுடன் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த என்ஐஏ, இதுதொடர்பாக தகவல்கள் அளிப்போருக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இந்நிலையில் ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள 6 பேரும், சமூக வலைத்தளங்கள் மூலம் பலருடன் தொடர்பில் இருந்ததாக தெரியவந்தது. அதை தொடர்ந்து தலைமறைவாக உள்ள 6 பேர் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் வகையில் தஞ்சை, திருவாரூர், திருச்சி, மயிலாடுதுறை என தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக, நாகப்பட்டினம் அருகே திட்டச்சேரி நடுத்தெருவை சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரான முகம்மதுரபீக்கின் (35) வீட்டிற்கு என்ஐஏ இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு தலைமையில் 5 பேர் குழுவினர் சோதனை செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் வடகரையில் நவாஸ்கான் வீடு, தேரழந்தூரில் முகமது பைசல் (37) வீடு, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, பேட்டை சாலை தமானியா தெருவில் வசிக்கும் வழக்கறிஞர் ராஜ்முகம்மது (35) வீடு, கும்பகோணம் மேலக்காவேரி கே.எம்.எஸ். நகரில் முகமது யூசுப் வீடு, கொரநாட்டு கருப்பூர் முகமது பைசல், திருபுவனம் வடக்கு முஸ்லிம் தெருவில் சகாபுதீன், திருமங்கலக்குடியில் காலித் மற்றும் இம்தியாஸ் வீடுகளில் சோதனை நடந்தது. திருச்சி ஏர்போர்ட் காமராஜர்நகர் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த அமீர்பாஷா (40), காந்தி மார்க்கெட்டில் நடத்தி வரும் துணிக்கடை மற்றும் அவரது வீடு, திருச்சி ஜே.கே.நகரில் அவரது தந்தை சர்தார் வீடு, திருவெறும்பூர் அடுத்த வாழவந்தான்கோட்டை பழைய பர்மா காலனியில் முகமது சித்திக் (40) வீடு, காரைக்கால் சுண்ணாம்பு கார வீதியை சேர்ந்த அஷ்ரப் அலி வீடு போன்ற இடங்களில் சோதனை நடந்தது. அப்போது செல்போன்கள், பென் டிரைவ் மற்றும் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் போன்றவை கைப்பற்றினர்.

Related posts

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம் சரியில்லை என ஆளுநர் கூறியதற்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்: பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1556 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல்