நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை ரன் குவிப்பு: கமிந்து மெண்டிஸ் அபார சதம்

காலே: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்துள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். பதும் நிசங்கா, திமத் கருணரத்னே இணைந்து இன்னிங்சை தொடங்கினர். கருணரத்னே 2, நிசங்கா 27 ரன் எடுத்து ஓ‘ரூர்கே பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப, ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன் எடுத்த நிலையில் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். தினேஷ் சண்டிமால் 30, தனஞ்ஜெயா 11 ரன் எடுத்து ஆட்டமிழக்க, இலங்கை 106 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், மீண்டும் களமிறங்கிய மேத்யூஸ் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, கமிந்து மெண்டிஸ் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தனர்.

மேத்யூஸ் 36 ரன்னில் வெளியேற, கமிந்து மெண்டிஸ் – குசால் மெண்டிஸ் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 103 ரன் சேர்த்து அசத்தியது. கமிந்து சதம் விளாச, குசால் அரை சதத்தை நிறைவு செய்து பிலிப்ஸ் பந்துவீச்சில் சவுத்தீ வசம் பிடிபட்டார். கமிந்து 114 ரன் (173 பந்து, 11 பவுண்டரி) விளாசி அவுட்டானார். முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்துள்ளது (88 ஓவர்). ரமேஷ் மெண்டிஸ் 14, பிரபாத் ஜெயசூரியா (0) களத்தில் உள்ளனர். நியூசி. பந்துவீச்சில் வில்லியம் ஓ‘ரூர்கே 3, கிளென் பிலிப்ஸ் 2, சவுத்தீ, அஜாஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related posts

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்