புத்தாண்டு கொண்டாட்டம்; தமிழக சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சென்னை: ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சென்னை கடற்கரை, மாமல்லபுரம் உள்பட தமிழக முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

குமரி

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் நேற்று காலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். நேற்று 2023ம் ஆண்டின் கடைசி சூரிய உதயம் மற்றும் மாலையில் கடைசி சூரிய அஸ்தமன காட்சிகளை கண்டு ரசித்தனர். இதையடுத்து இரவு நேரம் செல்ல செல்ல பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் குடும்பம் குடும்பமாக வர தொடங்கினர். குறிப்பாக இளசுகளின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் புத்தாண்டு பிறப்பதற்காக காத்திருந்தனர்.நள்ளிரவு 11.45 மணிக்கே வினாடிகளை எண்ண ஆரம்பித்தனர். சரியாக நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், ஆட்டம்-பாட்டம்- கொண்டாட்டம் என இளைஞர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். ஆர்வ மிகுதியில் சில இளைஞர்கள் கத்தி கூச்சலிட்டனர். ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். கும்பலாக வந்த நண்பர்கள் ரெடியாக கொண்டு வந்திருந்த கேக் வகைகளை அங்கேயே வெட்டி பலருக்கும் கொடுத்தனர். இன்று புத்தாண்டின் முதல் சூரிய உதயம் என்பதால் அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியிலும் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஊட்டி

கிறிஸ்துமஸ், பள்ளி அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை என தொடர் விடுமுறை வந்த நிலையில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகளால் ஊட்டியில் உள்ள காட்டேஜ்கள், லாட்ஜ் மற்றும் ரிசார்ட்டுக்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. நேற்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம் போன்ற பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. நேற்று இரவு பல்வேறு ஓட்டல்கள், ரிசார்ட்டுக்கள் மற்றும் காட்டேஜ்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின. சுற்றுலா பயணிகள் கேக் வெட்டியும், ஆடி, பாடி புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை மற்றும் கவியருவிக்கு திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ் ஆகிய வாகனங்களில் வந்திருந்தனர். அணையின் ஒருபகுதியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். ஆழியார் அணை மற்றும் பூங்காவின் அழகை ரசித்த சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்களும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கும் சென்றனர். அருவியில் மிதமாக கொட்டிய தண்ணீரில், பயணிகள் வெகுநேரம் குளித்து மகிழ்ந்தனர்.

கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்கு புத்தாண்டை கொண்டாட பிற மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேற்று குவிந்தனர். இதற்காக நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள், சுற்றுலாப் பயணிகளை கவருவதற்கு என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால், அனைத்து பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா இடங்களான மோயர் பாய்ண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு, அப்பர் லேக் வியூ, ரோஜாப் பூங்கா, பிரையண்ட் பார்க், செட்டியார் பூங்கா, கொடைக்கானல் ஏரி, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிந்தனர்.

இதனால், நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் ஹவுஸ் புல் ஆகின. உணவு விடுதிகளும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தன. சுற்றுலா வாகனங்களால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், கொடைக்கானல் ஏரிச் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. நகரில் கடந்த பல தினங்களாக 10 டிகிரிக்கு குறைவான வெப்பம் நிலவி வருகிறது. இரவில் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடுங்குளிரையும் பொருட்படுத்தால், சுற்றுலா பயணிகள் மிகவும் ரசித்து சென்றனர். இதேபோல் சென்னை கடற்கரை, மாமல்லபுரம், சேலம் ஏற்காடு உள்பட தமிழக சுற்றுலா தலங்களில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

Related posts

மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !!

ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதியதில் 8 பேர் காயம்

மின்சார கார் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு! : சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!!