மாநகராட்சி பகுதிகளில் புதிய வீடுகளுக்கான கட்டுமான நிபந்தனைகளை நீக்கவேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: மாநகராட்சி பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து புதிய வீடுகளை கட்டுவதற்கு உள்ள நிபந்தனைகளை நீக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் மாநகரில் பொதுவாக குறுகிய சாலைகளும், 3 அடிக்கும் குறைவான தெருக்களும் அதிகம் உள்ளன. அத்தகைய இடங்களில் உள்ள பழைய கடைகள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இயற்கைச் சீற்றங்களினால் இடிந்து விழும் சூழ்நிலையில் அவற்றை இடித்துவிட்டு புதிய கடைகள், வீடுகள் கட்ட மாநகராட்சி அனுமதி தருவதில்லை. மின் இணைப்பும் தருவதில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். நாகர்கோவில் மாநகராட்சியில் இவ்வாறு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு திட்ட ஒப்புதல் கிடைக்காமல் நிலுவையில் உள்ளன.

எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் பழைய கட்டுமானங்களை இடித்துவிட்டு புதிய வீடுகள், கடைகள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு அனுமதியும், மின் இணைப்பும் வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் விண்ணப்பதாரர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பலமுறை வலியுறுத்தினார்கள். அதனை தொடர்ந்து, நகர்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநர், பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றார். மேலும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தொடர் கட்டிடம் தொடர்பாக பிரச்னைகள் இருக்கிறது.

அதற்கு வழிவகை செய்வதற்காக ஏற்கனவே துறையின் மூலமாக ஆலோசித்து நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அதேபோல், திட்ட அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பற்றிய பிரச்னையும் இருக்கிறது. இவையெல்லாம் ஒருங்கிணைத்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். அமைச்சர் உறுதி அளித்து 4 மாதங்கள் ஆகியும் நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு விடிவுகாலம் வரவில்லை. நாகர்கோவில் மாநகராட்சி மக்களை பாதிக்கின்ற வகையில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து, உடனடியாக கட்டிட அனுமதி மற்றும் மின் இணைப்பு வழங்க விரிவான அரசாணையை வெளியிட வேண்டும்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி