புதிய அரசு அமைந்த பின் முதன்முறையாக பிரதமர் மோடி – வங்கதேச பிரதமர் சந்திப்பு: பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் முதன் முறையாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வந்துள்ளார். வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 3வது முறையாக பாஜ தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு வெளிநாட்டு தலைவர் மேற்கொள்ளும் முதல் இந்திய அரசு பயணம் இதுவாகும். கடந்த 9ம் தேதி நடந்த பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட 7 வெளிநாட்டு தலைவர்களில் ஷேக் ஹசீனாவும் ஒருவர் ஆவார்.

இதனை தொடர்ந்து நேற்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார். தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை சென்ற வங்கதேச பிரதமருக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். பின்னர் பிரதமர் மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன. இந்தியா-வங்கதேசம் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

டிஜிட்டல் துறையில் வலுவான உறவை உருவாக்குவது, பசுமை கூட்டாண்மை மற்றும் இரு தரப்புக்கும் இடையே ரயில்வே இணைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்ட ஊடக அறிக்கையில், ‘‘புதிய துறைகளில் ஒத்துழைப்பதற்கான எதிர்கால திட்டத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம். பசுமை கூட்டாண்மை, டிஜிட்டல் கூட்டாண்மை, விண்வெளி போன்ற துறைகளில் ஒத்துழைப்பது என ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இருநாட்டு இளைஞர்களும் பயனடைவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அதை தொடர்ந்து இந்திய தொழில் அதிபர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஷேக் ஹசீனா தமது நாட்டில் முதலீடு செய்ய அழைத்தார்.

Related posts

இந்துக்களிடம் பிரிவினையை தூண்டலாம் என பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார்: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு

அவைக் குறிப்பில் இருந்து பேச்சு நீக்கம்: சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்

வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத சிபிஐ பிடிவாரண்ட்!!