புதிய சிந்தனையுடன் வாய்ப்புகளை உருவாக்குங்கள்

நம்முடைய உறுதியான நம்பிக்கையான சிந்தனை தான் செயலாக மலர்ந்து நம்மை பெருமைப்படுத்துகிறது.எனவே எதை சிந்தித்தாலும் நுட்பமாக சிந்திக்க பழகிக் கொண்டால்தான் வாழ்வில் நாம் விரும்பும் முடிவுகளை ஒவ்வொரு முறையும் குறிதப்பாமல் வீசி பிடிக்க முடியும்.உங்கள் இலட்சியங்களை கற்பனை சக்தியின் மூலம் எவ்வளவு வேண்டுமானாலும் சிந்தித்து மனதில் ஒரு உயர்ந்த வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளலாம். அதே நேரத்தில் அந்த உயர்வை அடைய அறிவை பயன்படுத்தி ஒவ்வொரு அடியாக முயற்சி செய்கிறீர்கள் என்றால், நீங்கள் உண்மையில் நுட்பமாக சிந்திக்கும் மனிதர் தான்.ஏனென்றால் உணர்ச்சி வசப்படாமல் அறிவின் வழியே மட்டுமே தொடர்ந்து செல்ல உறுதியாக இருக்கும் நீங்கள் வழியில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் அவற்றைச் சமாளிக்கத் தேவையான புதிய வழி உங்களிடம் முன்கூட்டியே திட்டமிட்டு தயாராக இருக்க வேண்டும்.கோல்ப் விளையாடுபவர்களும்,கேரம் விளையாடுபவர்களும் தங்கள் கற்பனையில் விளையாடி பார்த்து, நன்கு உறுதி செய்து கொண்ட பின்பு,விளையாடி பந்தையும்,காயையும் குழிக்குள் தள்ளி விடுகின்றனர்.

ஒவ்வொரு முறையும் நுட்பமாக சிந்தித்து தான்,இந்த இரு விளையாட்டு வீரர்களும் விளையாடுகின்றார்கள். நம்முடைய வாழ்க்கையிலும் மிகப்பெரிய இலட்சியமாக இருந்தாலும் சரி, எதிரில் குறிக்கிடும் தடைகளாக இருந்தாலும் சரி, இந்த விளையாட்டு வீரர்களை போலத்தான் கற்பனையில் சிந்தித்து,விரும்பும் முடிவை அடைய அறிவின் வழியை முயற்சி செய்ய வேண்டும்.கற்பனையில் நாம் விரும்பும் முடிவை காணும் போதே அதை அடைவதற்கான வழியை நுட்பமாக சிந்தித்தால் போதும்.அப்போது தோன்றும் புதிய சிந்தனைகளும், புதிய வழிகளும் கற்பனையில் நாம் விரும்பிய முழுமையான வெற்றியை நிஜத்தில் பெற்றுத்தரும். இந்த வழியில் முயற்சி செய்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இளம் சாதனை பெண்மணிதான் கீதாஞ்சலி. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் இந்திய வம்சாவளி சிறுமி கீதாஞ்சலி. போதை பழகத்தில் இருந்து விடுபடுவது முதல் இணைய வழி மிரட்டல்கள் வரை பல பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய சிந்தனைகளுடன், புதுமையான கண்டுபிடிப்புகளின் மூலமாக தீர்வு கண்டுள்ளார். நீரில் கலந்துள்ள மாசு தன்மை குறித்து அறிந்து கொள்ளக்கூடிய ‘டெத்திஸ்’ என்ற கருவியை உருவாக்கியதற்காக EPA ஜனாதிபதி விருதையும், டிஸ்கவரி எஜுகேஷன் வழங்கும் அமெரிக்காவின் ‘சிறந்த இளம் விஞ்ஞானி’ பட்டத்தையும் பெற்றார்.

ஆன்லைனில் வரக்கூடிய தேவையற்ற தவறான விஷயங்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, பயனாளியை எச்சரிக்கும் திறன் கொண்டது ‘kindly’ என்ற பயனுள்ள செயலியை உருவாக்கியுள்ளார்.
அமெரிக்காவின் பிரபல ‘டைம்’ இதழ் நடத்திய போட்டியில் 5 ஆயிரம் போட்டியாளர்களுக்கு இடையே கீதாஞ்சலி ராவ் 2020-ம் ஆண்டின் சிறந்த குழந்தையாகத் தேர்வு செய்யப்பட்டு சாதித்து உள்ளார்.அதுமட்டுமின்றி பாரம்பரியம் மிக்க டைம்ஸ் பத்திரிகையின் அட்டைப்படத்திலும் கீதாஞ்சலி புகைப்படம் இடம் பெற்றது.கீதாஞ்சலி எழுதிய ‘யங் இன்னோவேட்டர்ஸ் கைடு டு STEM’ என்ற புத்தகம்,உலகெங்கிலும் உள்ள பிரபலமான பள்ளிகளில் STEM பாடத்திட்டமாக பயன்படுத்தப்படுகிறது.மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பயின்று வரும் கீதாஞ்சலி, ஃபோர்ப்ஸின் 30 வயதுக்குட்பட்ட 30 சாதனையாளர்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது பெண்ணான கீதாஞ்சலியின் சாதனையை பாராட்டி அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் கௌரவித்துள்ளார்.
சர்வதேச பெண் குழந்தை தினத்தை கொண்டாடுவதற்காக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் “பெண்கள் முன்னணி மாற்றம்” (பெண்கள் முன்னணி சவால்) விழாவில் 17 வயதான கீதாஞ்சலி ராவ் இந்த கௌரவத்தைப் பெற்றார் வெள்ளை மாளிகையின் பாலின கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் கீதாஞ்சலியுடன் சேர்த்து மேலும் 14 இளம் பெண் தலைவர்கள் கௌரவப்படுத்தப்பட்டார்கள்.
இது குறித்து தெரிவித்த ஜில் பைடென் வெள்ளை மாளிகையில் மாற்றத்தை வழிநடத்தும் இந்த அசாதாரண பெண் குழுவை சந்தித்தது எனக்கு கிடைத்த மரியாதை.இந்த இளம் பெண்சாதனையாளர்கள் இந்த பூமியை தங்களின் புதிய சிந்தனைகளால் காப்பாற்றி பாதுகாத்ததற்காக பாராட்டினேன். இவர்கள் ஒவ்வொருவரும் மனதை மாற்றும் கதைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள் என தெரிவித்து உள்ளார்.

டைம் பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில், கீதாஞ்சலி ராவ், ஒரு வெள்ளை லேப் கோட் அணிந்து கையில் ஒரு பதக்கத்துடன் காணப்படுகிறார்.ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஏஞ்சலினா ஜோலி (Angelina Jolie) டைம் பத்திரிகைக்காக கீதாஞ்சலியை பேட்டி கண்டார். இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் உறுதி கீதாஞ்சலியிடம் தெளிவாகத் உள்ளது என்று ஏஞ்சலினா தெரிவித்தார்.மேலும் எதில் உங்களுக்கு ஈடுபாடும் திறமையும் அதிகம் உள்ளதோ, அதில் கவனம் செலுத்துங்கள் என்று கீதாஞ்சலி பேட்டியின் மூலமாக இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஆலோசனைகளை வழங்கினார்.கீதாஞ்சலி ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல ஆர்வமுள்ள விஞ்ஞானி, எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் உலகம் முழுவதும் STEM கல்வியின் செயலில் ஊக்குவிப்பவர்.இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா,மத்திய அமைச்சரும் எழுத்தாளருமான சசி தரூர், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, நடிகர் பிரியங்கா சோப்ரா, சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா மற்றும் இன்னும் பலர் இவரது சாதனையை பாராட்டியுள்ளனர்.இவரைப் போலவே புதிய சிந்தனைகளையும், புதிய வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொண்டு வாழ்க்கையின் வளர்ச்சிக்கான வழிகளை நாமே உருவாக்கிக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற தயாராகுங்கள்.

Related posts

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்