இந்தி திணிப்பு புகார்.. தவறுதலாக நாங்கள் உணர்வுகளை காயப்படுத்தி இருந்தால் மனதார மன்னிப்பு கோருகிறோம் : இன்சூரன்ஸ் நிறுவனம்

சென்னை : இந்தியில் சுற்றறிக்கை அனுப்பியதற்காக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் அறிக்கைகள் இந்தியில் தான் இருக்க வேண்டும்; அவற்றுக்கு தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் பதில்களும் இந்தியில் தான் இருக்க வேண்டும்; அன்றாடப் பணிகளில் தொடங்கி அலுவலக இதழ் வரை அனைத்தும் இந்தியில் தான் இருக்க வேண்டும் என்று நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அதன் தலைமை அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது அப்பட்டமான இந்தித் திணிப்பு என்று தமிழ்நாடு முதல்வர் மு .க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அநீதியானது. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீர்ஜா கபூர் இந்தி பேசாத மக்களையும் மற்றும் இந்தி பேசாத ஊழியர்களையும் அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றார். இதன் எதிரொலியாக இந்தியில் சுற்றறிக்கை அனுப்பியதற்காக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”உள்ளூர் மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை மதிக்கும் பலதரப்பட்ட மற்றும் அமைதியான பணியிடத்தை மேம்படுத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாடு முழுவதும் உள்ள வளமான கலாச்சார மரபு மற்றும் மொழியியல் வகைகளுடன் நாங்கள் முழுமையாக இணைந்துள்ளோம். தவறுதலாக நாங்கள் உணர்வுகளை காயப்படுத்தி இருந்தால் மனதார மன்னிப்பு கோருகிறோம்,” என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மதுரை எம்.பி.சு வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் மன்னிப்பு கேட்டது, இந்தி திணிப்புக்கு எதிரான வெற்றி. அலுவல் மொழி விதிகளில் தமிழ்நாட்டுக்கு உள்ள தனித்துவம் காக்கும் பயணத்தில் வெற்றி,”என பதிவிட்டுள்ளார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்