புதிய தலைவலி

உலகத்தின் பார்வை ஒட்டுமொத்தமாக வங்கதேசத்தை நோக்கி திரும்பியுள்ளது. அங்கு இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்களின் புரட்சி போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து அவரது வீடு உள்ளிட்ட பல இடங்களை மாணவர்கள் சூறையாடினர். இந்நிலையில் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேறியது தவறு என்று அவரது கட்சியினரும், அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.

மாணவர்களின் எதிர்ப்பை இங்கிருந்தே சந்தித்து இருக்க வேண்டும். கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் வரவேற்று இருப்போம். ஆனால் அவர் நாட்டைவிட்டு வெளியேறியதால் பல்வேறு துன்பங்களுக்கு அமைச்சர்களும்,
கட்சியினரும் ஆளாகியுள்ளோம் என்றனர். இந்நிலையில் தான் ஷேக் ஹசீனாவின் நீண்ட கால அரசியல் எதிரியான 84 வயது முகம்மது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் குறுங்கடன் பயன்பாட்டின் முன்னோடியாக இவரை மக்கள் போற்றுகின்றனர். ஆனால் இவரை ஏழைகளின் ரத்தம் உறிஞ்சுபவர் என்று வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்தவர் ஹசீனா.

எதிர்க்கட்சிகளை அடக்கி ஆண்ட ஷேக் ஹசீனா தற்போது அதற்கான விலையை கொடுத்துள்ளார் என்றே மக்கள் கூறுகின்றனர். ஹசீனாவின் ஆட்சியில் ஜனநாயக தேர்தலுக்கு வாய்ப்பில்லை என்று தேர்தலை புறக்கணித்த பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவர் கலீதா ஜியா வீட்டுச்சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இப்படி வங்கதேசத்தில் அரசியல் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் அந்நாட்டின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஹசீனாவுக்கு தொடர்ந்து இங்கு தஞ்சமளிப்பது இந்திய எல்லைகளில் பதற்றம் உருவாக வாய்ப்பளித்துவிடும்.

வங்கதேசம் இந்தியாவுடன் 4 ஆயிரம் கி.மீ மேல் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. எனவே அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டால் இந்திய எல்லைகளில் பதற்றம் தவிர்க்கமுடியாதது ஆகிவிடும். வங்கதேசத்தில் அமையும் புதிய அரசு ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று கேட்டால், அதுவும் இந்தியாவுக்கு சிக்கலைத்தான் கொடுக்கும். எனவே இந்திய வெளியுறவுத்துறை இவ்விவகாரத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாய்ச்சொல் வீரராக மட்டும் இல்லாமல் செயலில் இறங்க வேண்டும்.

வங்கதேசத்தை ஒட்டியுள்ள எல்லைகளில் படைகளை நிறுத்திவைத்திருந்தாலும் பதற்றமான சூழல் உருவாகாமல் தடுக்க சர்வதேச கொள்கைகளை புத்திசாலித்தனமாக கடைபிடிப்பதன் மூலமே இந்திய எல்லைகளில் நெருக்கடியை சமாளிக்க முடியும். பிரதமராக ஹசீனா இருந்தவரை இந்தியாவுடனான பொருளாதார, கலாச்சார, வணிக உறவுகள் மேம்பட்டு இருந்தன. ஹசீனா இந்தியாவுக்கு அளித்துவந்த ஆதரவை அங்குள்ள எதிர்க்கட்சிகள் எதிர்த்து போராட்டம் நடத்தியதும் உண்டு. வங்கதேச ஆட்சியில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது என்ற கருத்தும் அங்கு மேலோங்கியது. ஹசீனாவை தவிர்த்து வங்கதேசத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவுடன் முன்பிருந்த நட்புறவு தொடருமா என்பது சந்தேகம் தான். வங்கதேசத்தின் எதிர்க்கட்சிகள் சீனாவுடன் நட்புறவுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். எனவே, இந்தியாவுக்கு வங்க தேசம் புதிய தலைவலிதான்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்