புதிய கிரிமினல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைத்ததற்கு தடை கோரிய மனு தள்ளுபடி: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: புதிய கிரிமினல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒன்றிய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய கிரிமினல் சட்டங்கள், ‘இந்தி’ மொழியில் பெயர் வைத்துள்ளதை எதிர்த்து கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் ஜீவீஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய கிரிமினல் சட்டங்களின் பெயர்கள் இந்தியில் உள்ளன. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 348-இன் படி, அதிகாரபூர்வமான சட்ட நூல்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால் அரசியலமைப்பு சட்டப்பிரிவுக்கு எதிராக இந்தியில் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தி பேசாத மாநில மக்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு மிகவும் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. மேலும் இது மொழி சிறுபான்மையினர் மீது மொழி திணிப்பாகவும் உள்ளது. எனவே இந்தியில் பெயர் வைத்திருப்பதை தடை செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. மேற்கண்ட மனு கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகமது முஸ்தாக் மற்றும் நீதிபதி எஸ்.மனு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related posts

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்