தொலைநிலை உயர்கல்வி சேர்க்கைக்குப் புதிய நடைமுறை!

திறந்தநிலைக் கல்வி, தொலைநிலைக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வியை கற்க விரும்பும் மாணவர்களுக்கான புதிய சேர்க்கை நடைமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டில் அங்கீகரிக்கப்படாத பல்வேறு கல்வி நிலையங்கள் ஆன்லைன் வழியாகவும், தொலைநிலைக் கல்வி வழியாகவும், திறந்தநிலைக் கல்வி வாயிலாகவும், பல்வேறு படிப்புகளை நடத்துகின்றன. அவற்றில் சேர்ந்து படித்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதைப் புகார்களின் வாயிலாக யு.ஜி.சிக்கு தெரியவந்துள்ளது. இதைத் தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம், கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி டெல்லியில் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.இதுகுறித்து, யு.ஜி.சி., தலைவர் மமிதாலா ஜெகதேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கல்வியாண்டின், தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான புதிய நடைமுறை, அடுத்த மாதம் அமலாகும்.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் மட்டுமே மாணவர்கள் சேருவதை, வெளிப்படைத்தன்மையுடன் உறுதி செய்ய முடியும். மாணவர்கள், யு.ஜி.சி.,யின் https://deb.ugc.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தொலைதுாரக் கல்வி நிறுவனங்களின் பட்டியலைப் பார்த்து தெரிந்து கொண்டு பின் சேரலாம். மேலும் யு.ஜி.சி – டி.இ.பி., இணையதள போர்ட்டலின் மாணவர்களுக்கான deb.ugc.ac.in/StudentDebId என்ற பக்கத்தில் பதிவு செய்து, அவர்களின், ‘அகாடமிக் பாங்க் ஆப் கிரடிட்’ -ஐ.டி.யை பயன்படுத்தி, தனித்துவமான ஆயுள் கால அடையாள குறியீட்டைப் பெற வேண்டும். இதைப் பயன்படுத்தி த்தான், தொலைநிலைக் கல்வி சேர்க்கையில் இணைய முடியும். இந்த ஆயுள் கால ஐ.டி.யைத்தான், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்க வலியுறுத்தப்படும். இதனால், அங்கீகாரமில்லாத நிறுவனங்கள் மற்றும் படிப்புகளில் சேர்வதைத் தவிர்க்க முடியும். மேலும் விவரங்களை https://deb.ugc.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம், எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்