நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை, ஆயுள் தண்டனை பெற்ற 9 பேரும் விடுதலை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை பெற்ற அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையா. சென்னையில் மருத்துவராக பணிபுரிந்தார். கடந்த 2013ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போது, அவரை கூலிப்படையினர் வெட்டிக் கொன்றனர். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ள சொத்து தொடர்பாக இந்த கொலை அரங்கேறியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது

இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், இன்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு மரண தண்டனையும், மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய கோரி விசாரணை நீதிமன்றம் வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது. இதேபோல, ஏழு பேரும் மரண தண்டனையை எதிர்த்தும், ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.சண்முகசுந்தரம், ஜான் சத்தியன், கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜு ஆகியோர் ஆஜராகினர். முத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், விசாரணை நீதிமன்றம் முறையாக தங்களின் வாதங்களை கருத்தில் கொள்ளவில்லை. கொலை, கூட்டுச் சதி, உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல் துறை தரப்பில் முறையாக நிரூபிக்கவில்லை என்று வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர், அனைத்து தரப்பு வாதங்களை முழுமையாக கவனத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் நேற்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பில், தண்டனையை உறுதி செய்ய அரசு தரப்பு தவறிவிட்டது. குற்றத்திற்கான சாட்சியங்களை அரசு தரப்பு சரிவர எடுத்துரைக்கவில்லை. இதை விசாரணை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் தீர்ப்பளித்துள்ளது. எனவே, இந்த வழக்கில் தண்டனை பெற்ற அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்கள் அபராதம் கட்டியிருந்தால் அதை திரும்ப தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Related posts

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!