கூட்டணி அரசு சரிந்ததை அடுத்து நெதர்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய மார்க் ருட்டே ராஜினாமா!!

ஆம்ஸ்டடாம் : குடியேற்றக் கொள்கை தொடர்பான உள்நாட்டு குழப்பத்தால் கூட்டணி அரசு சரிந்ததை அடுத்து 13 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே ராஜினாமா செய்துள்ளார். நெதர்லாந்து நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 4 கட்சி கூட்டணி அரசில் மார்க் ருட்டே பிரதமராக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் புலம்பெயர்ந்தோர் தொடர்பான புதிய மசோதா ஒன்றை நெதர்லாந்து அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு கூட்டணி கட்சிகள் இடையே ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து நெதர்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய மார்க் ருட்டே ராஜினாமா செய்துள்ளார்.

மார்க் ருட்டேவின் பதவி விலகல் நெதர்லாந்து முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமது அமைச்சரவை முழுவதுமாக ராஜினாமா செய்ய உள்ளதாக பிரதமர் ருட்டே மன்னர் வில்லம் அலெக்ஸாண்டரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த ஆண்டின் இறுதிக்குள் நெதர்லாந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது. புதிய அரசு அமையும் வரை பிரதமர் மார்க் ருட்டே காபந்து பிரதமராக நீடிப்பார். 56 வயதாகும் இவர் 2006 முதல் சிபிபிஎப்டி என அழைக்கப்படும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான பழமைவாத மக்கள் கட்சிக்கு தலைமை தாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

25% ஒதுக்கீடு: CBSE, ICS பள்ளியை சேர்க்க இயலாது என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் தமிழக வர்த்தகர்கள் சந்திப்பு