Sunday, September 15, 2024
Home » நேந்திரங்காயில் குழந்தைகளுக்கான சத்து மாவு : அசத்தும் பெண் தொழில்முனைவோர் சிவசத்தியா ஆனந்தன்!

நேந்திரங்காயில் குழந்தைகளுக்கான சத்து மாவு : அசத்தும் பெண் தொழில்முனைவோர் சிவசத்தியா ஆனந்தன்!

by Porselvi

வழிகாட்டி!

தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் காலடி எடுத்து வைக்காத துறைகளே இல்லை எனலாம். புதிய பொருட்களை உருவாக்கி அதனை சந்தைப்படுத்தி விற்பனையில் அசத்தியும் வருகிறார்கள். புதிய தொழில்களில் தயக்கமற்று இறங்கி துணிந்து செயல்படுத்தி வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள். அந்த வகையில் நேந்திரங்காயில் குழந்தைகளுக்கான சத்துமாவினை தயாரித்து விற்பனை செய்து கலக்கி வருகிறார் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த பெண் தொழில்முனைவோர் சிவசத்தியா ஆனந்தன். குழந்தையின் முதல் உச்சரிப்பான உங் வையே தனது புராடக்ட்டுக்கான பெயராக வைத்து விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் சிவசத்தியா பேபி புராடக்ட்டுகளை தயாரிப்பது குறித்தும் அதனை முறையாக சந்தைப்படுத்தல் வழிமுறைகள் குறித்தும் நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.

குழந்தைகளுக்கான சத்து மாவினை தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணம் எழுந்தது எப்படி?

எனது இரண்டாவது குழந்தை பிறந்தபோது ப்ரீமெச்சுட் பேபி என்பதால் எடை குறைவாக இருந்தான். அவன் ஒரு கிலோவிற்கும் கீழே இருந்ததால் அவனை கவனமாக பராமரிக்க எண்ணி சத்துள்ள ஆதாரங்களை கொடுக்க விரும்பினேன். எனது பக்கத்து வீட்டு வயதான பெண்மணி ஒருவர் என்னை நேந்திரங்காயில் குழந்தைகளுக்கான சத்துமாவினை தயார் செய்து கொடுக்க அறிவுறுத்தினார். அதனை எவ்வாறு செய்வது என்றும் சொல்லிக் கொடுத்தார். அதன் பிறகு எனது குழந்தைக்கு அதனை தயாரித்து கொடுக்க ஆரம்பித்தேன். அது நன்றாக பயனளித்தது என்பது மிக மகிழ்ச்சியான விஷயம். கொரோனா காலகட்டத்தில் அந்த வயதானவர் இறந்துபோனது அதிர்ச்சியாக இருந்தது. அவர் கற்றுக்கொடுத்ததை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உத்வேகம் மனதிற்குள் எழுந்தது. அதன் பிறகு உருவானது தான் ‘‘உங்”.

இதனை தொழிலாக செய்யத் துவங்கியது எப்போது?

ஒருமுறை குழந்தைகளுக்கான உணவினை தயாரிக்கும் போது அளவுக்கதிகமாக தயாரித்து விட்டேன். சிரமப்பட்டு தயாரித்ததை வீணாக்க விரும்பாமல் வீட்டுக்கு வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தேன். அவர்கள் வீட்டுக் குழந்தைக்கு கொடுக்க ஆரம்பித்ததும் அதன் நற்பயன்களை சொல்லி பலரும் மீண்டும் தயாரித்து தர கேட்டார்கள். இறந்து போன அந்த வயதான பெண்மணியின் நினைவாக எதாவது செய்ய வேண்டும் என்கிற அடிமன எண்ணத்தின் அடுத்த வடிவமாகவும், தேவையிருப்பவர்களுக்காகவும் ஆரம்பித்தது தான் குழந்தைகளுக்கான இந்த “உங்” சத்துமாவு.

நேந்திரங்காயில் என்னென்ன தயாரிக்கிறீர்கள்?

தற்போது நான்கு வகையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். நேந்திரங்காய் சத்து மாவு. நேந்திரங்காய் பாதாம் சத்துமாவு , நேந்திரங்காய் கேழ்வரகு சத்துமாவு. உயர்தர புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த உடனடி சத்துமாவு என்கிற நான்கு பொருட்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்கிறேன். எதிர்காலத்தில் இன்னும் சில புதியவகை ப்ராடக்ட்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற ஆசைகள் உண்டு.

புரோட்டீன் இன்ஸ்டன்ட் ஹெல்த் மிக்ஸ் குறித்து….

இதில் பதினாறு வகையான உயர்தர புரோட்டீன் நிறைந்த பொருட்களை குறிப்பிட்ட நேரம் ஊற வைத்து, வெயிலில் காயவைத்து, பதமாக வறுத்து அரைத்து தயாரிக்கிறோம். உயர்தரமான புரோட்டீன் சத்துக்களை அடக்கிய இந்த சத்துமாவு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இதனை நேரிடையாக பாலிலோ அல்லது சுடுநீரிலோ கலந்து குடிக்கலாம். குழந்தைகள் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கும் என பலருக்கும் ஏற்றது. டயட் பாலோ செய்பவர்களுக்கும் இது நல்ல பலனை தருகிறது.

குழந்தைகளுக்கான பொருட்கள் என்பதால் அதனை தயாரிப் பதற்காக எடுக்கும் சிறப்புக் கவனங்கள் என்ன?

பொதுவாக பெரியவர்களுக்கான பொருட்களை தயாரிப்பதை விட சிறு குழந்தைகளுக்கான பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய நிறைய கவனம் தேவைப்படுகிறது. சத்துமாவிற்கு தேவையான காய்கறிகளை சுத்தமான Ro தண்ணீரில் தான் கழுவி பயன்படுத்துவோம். கழுவிய பொருட்களை வெயில் காலங் களில் சூரிய ஒளியில் தான் காய வைப்போம். சூரிய ஒளியில் மேலும் சில சத்துக்கள் சேரும். காய வைக்கும் போது கூட தூசு மண் விழாமலிருக்க மஸ்லின் துணியை பயன்படுத்தி கவர் செய்துதான் காய வைப்போம். அப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சுத்தமாக தயாரித்து தருகிறோம். குழந்தைகளுக்கு தயாரிக்கும் உணவுகள் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்கிற தார்மீக பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறது. இதில் பயன்படுத்தப்படும் நேந்திரங்காய்களை நேரிடையாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறேன். அவை மருந்தற்ற இயற்கை முறையில் விளைவிக்கப் பட்டதா என ஆய்வகத்தில் கொடுத்து உறுதி செய்தும் கொள்கிறேன்.

உங்கள் பொருட்களுக்கான வரவேற்பு எப்படி உள்ளது?

எங்கள் வாடிக்கையாளர்களிடையே நேந்திரங்காய் சத்துமாவிற்கான வரவேற்பு பெருமளவு உள்ளது. ஒரு முறை வாங்கி பயன்படுத்தியவர்கள் மீண்டும் அந்த பொருட்களை வாங்க தூண்டுகிறது அதன் நற்பலன்கள் எனலாம். அவர்களின் வாய்மொழியான விளம்பரங்கள் மூலம் மேலும் பல வாடிக்கையாளர்கள் எங்களுக்கு கிடைக்கிறார்கள். பேஸ்புக் வாட்சப் குழுக்கள், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் கிடைத்து வருகின்றனர். மேலும் சில மருத்துவர்களின் பரிந்துரைகள் பேரிலும் சிலர் வாங்கிச் செல்கின்றனர். எனது தயாரிப்புகளால் கவரப்பட்ட சௌத் ஆப்பிரிக்க டாக்டர் ஒருவர் இங்கு வரும்போதெல்லாம் இதனை வாங்கி சென்று தனது நோயாளிகளுக்கு வழங்குகிறார். மேலும் துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் குழந்தைகளுக்காக நிறைய சத்துமாவினை வாங்கிச் செல்கிறார்கள். தமிழகம் முழுவதும் கொரியர் மூலமாக பலருக்கும் விற்பனை செய்கிறேன். மொத்தத்தில் நல்ல தரமான பொருட்களுக்கான வரவேற்பு எப்போதும் அமோகமாகவே இருக்கும்.

உங்கள் தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் இருக்கிறதா?

நிச்சயமாக. தற்போது சிறிய யூனிட்டாக செயல்படும் எங்கள் தயாரிப்புக் கூடத்தினை பெரியதாக செய்ய வேண்டும். மேலும் பல புதிய இயந்திரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். இந்த தயாரிப்புகளை ஆர்கானிக் ஸ்டோர்கள் மூலம் விற்பனை செய்ய வேண்டும். கெமிக்கல் கலக்காத இயற்கை முறையில் விளைந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்தி பொருட்களை தயாரிக்க வேண்டும் என்பது எனது லட்சியம். நேந்திரங்காயில் தோசை மிக்ஸ், பிஸ்கட் மற்றும் மில்லட்கள் சேர்த்த மதிப்பு கூட்டப்பட்ட பலவிதமான பொருட்களை தயாரிக்க வேண்டும் என்கிற ஐடியாவும் இருக்கிறது.

உங்களைப் போன்று பெண் தொழில்முனைவோராக விரும்பும் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பெண்களுக்கு வீட்டில் எவ்வளவு தான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் தனது சொந்த காலில் நிற்பதும் பொருளாதார சுதந்திரத்துடன் இருப்பது என்பதும் தான் பெருமையான விஷயமாக இருக்க முடியும். அதே சமயம் குடும்பத்தையும், தொழிலையும் பேலன்ஸ்டாக பார்த்துக் கொள்ளும் நேர மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் தொழிலில் தொடர்ந்து தடையில்லாமல் இயங்கி வெற்றிக் கொடியுடன் வலம் வர முடியும் என்கிறார் சிவசத்தியா ஆனந்தன்.
– தனுஜா ஜெயராமன்

You may also like

Leave a Comment

twenty − 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi