பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஒரே நாளில் ரூ4 கோடிக்கு வர்த்தகம்; ரூ1 லட்சத்துக்கு விற்பனையான நெல்லூர் ஆடுகள்: கே.வி.குப்பத்தில் களைகட்டிய வாரச்சந்தை

 

கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் வாரம் தோறும், திங்கட்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஆட்டு சந்தை அதிகாலை கூடியது. வருகிற 29ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் அதிகாலை 4 மணியிலிருந்தே ஆயிரத்திற்கும் ேமற்பட்ட ஆடுகள் வாரச் சந்தைக்கு கொண்டுவரப் பட்டது.இதில் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலத்தில் இருந்தும், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டது.

மார்ஷலா ஆடுகள், நெல்லூர் ஜீடிப்பி ரக ஆடுகள், செம்மறி ஆடுகள், கசாயம் ஆடுகள், குட்டி ஆடுகள், மயிலைம்பாடி ரக ஆடுகள், சீனிகிடாய் ரக ஆடுகள், வெள்ளாடுகள், பெங்களூர் ஜமுனாபாரி ரக ஆடுகள் என பல ரகங்கள் கொண்ட ஆடுகள் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் கொண்டுவந்ததை சக வியாபாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனால் ஆட்டு சந்தை வழக்கம் போல் இல்லாமல் நேற்று களைகட்டியது. காலை 8 மணியளவிலிருந்து 10 மணி வரை போக்குவரத்து நெரிசலுடன் அப்பகுதி காணப்பட்டது. மேலும் கொண்டுவரப்பட்ட ஆடுகள் பெரும்பாலும் வளர்ப்பு ஆடுகள் என்பதால் சிலர் விற்கும்போது, அதன் உரிமையாளர்கள் அழுதுகொண்டே விற்றனர்.

சராசரியாக ஆடுகளின் விலை ரூ40 ஆயிரம் வரையும், சில ஆடுகள் விலை ரூ80 ஆயிரம் வரையும், சில செம்மறி ஆடுகள் விலை ரூ90 ஆயிரம் வரையும் விற்பனையானது. இதில் நெல்லூர் ரக ஜீடிப்பி ரக ஆடுகள் தலா ரூ1 லட்சம் வீதம் ஒரு ஜோடி ரூ2 லட்சம் வரை விலை போனது. அதிகபட்சமாக ஒரு ஆட்டின் விலை ரூ1 லட்சம் வரை போனதால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றனர். கடந்த வாரம் நெல்லூர் ஜீடிப்பி ரக ஆடுகள் ரூ85 ஆயிரம் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது. நேற்று பெங்களூர் ஜமுனாபாரி ஆடுகள் ரூ50 ஆயிரம் வரையிலும், மார்ஷலா ஆடுகள் ரூ75 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

இதேபோல் பல ரக ஆடுகள் ரூ40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று மதியம் 12 மணி வரை ஆடுகள் விற்பனை ரூ4 கோடி வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாகவே ஆடுகளின் விலை கூடுதலாக விற்பனையாகி வருவதாகவும், பண்டிகை முடிந்த பின் ஆட்டின் விலை கட்டுக்குள் வரும் எனவும் தெரிவித்தனர்.

Related posts

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி

மிஸ் & மிஸஸ் அழகிகள்… கலக்கும் அம்மா – மகள்!