24 மணி நேர கெடு முடிந்தது!: நெல்லை மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது..!!

நெல்லை: நெல்லை மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது. திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சாலைகள், நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் 24 மணி நேரத்திற்குள் அதை அகற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் கெடு விதித்தது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட செய்தியில், திருநெல்வேலி மாநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையையும், நடைபாதையையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் பொருள்கள், மேற்கூரைகள் ஆகியவற்றை 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாகவே அகற்றிட வேண்டும்.

தவறும்பட்சத்தில் மாநகராட்சி மூலம் அகற்றப்படும். ஆக்கிரமிப்பு பொருள்கள் திரும்ப வழங்கப்பட மாட்டாது. ஆக்கிரமிப்பு வகைக்காக அபராத கட்டணம், செலவு தொகையையும் செலுத்த நேரிடும். மேலும் கட்டுமானம் மற்றும் கட்டட பராமரிப்பு பணி செய்வோரும் கட்டட இடிபாடுகளையோ, கட்டுமானப் பொருள்களையோ பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாகவோ, கழிவுநீர் செல்லும் கால்வாய்களிலோ கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தொடங்கியுள்ளது. 24 மணி நேர அவகாசம் முடிந்ததால் நெல்லை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் இன்று முதற்கட்டமாக நெல்லை மாநகர பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் தெருவில் இருந்து டவுன் ஆர்ச் வரை உள்ள பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆகியோர் இந்த பணிகளை செய்து வருகின்றனர். ஆக்கிரமிப்புகள் உள்ள கடைகள், கடைகளில் உள்ள மேற்கூரைகள், விளம்பர பலகை என அனைத்தும் அகற்றப்பட்டது.

மேலும் தனியார் நிறுவனத்திற்காக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஜெனரேட்டர்களையும் அவர்கள் அகற்றி அபராதம் விதித்தனர். வருகின்ற 31ம் தேதி வரை தொடர்ந்து மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்