நெல்லையப்பர் கோயிலுக்கு வெள்ளி தேர் செய்ய 100 கிலோ வெள்ளி கட்டிகள்: அமைச்சர் சேகர்பாபு வழங்கி பணிகளை தொடங்கினார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்திட 100 கிலோ வெள்ளிக் கட்டிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கி, வெள்ளித்தகடு வேயும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வெள்ளித் தேர் ராஜிவ் காந்தி மரணத்தின்போது கலவர காரர்களால் தீக்கிரை ஆக்கப்பட்டது. அதை தொடர்ந்து வெள்ளி தேரை புனரமைக்கும் பணி சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு அறநிலைத்துறை கவனத்திற்கு கொண்டு வந்தவுடன் முதல்வர் வெள்ளித்தேரை உருவாக்கும் பணியை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார். அந்த வகையில் முதற்கட்டமாக கள ஆய்வு செய்து வெள்ளி தேரை மர தேராக உருவாகும் பணி முடிந்து இருக்கிறது.

இந்த வெள்ளித்தேருக்கு சுமார் 450 கிலோ வெள்ளி தேவைப்படுகிறது. கோயில் சார்பில் 9 கிலோ நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெள்ளித்தேரை உருவாக்க 100 கிலோ வெள்ளிக்கட்டிகளை நன்கொடைகளாக வழங்கி உள்ளனர். இதன் மதிப்பு 1 கோடி 2 லட்சம். மீதமுள்ள 300 கிலோ அளவு வெள்ளிக்கட்டியை நன்கொடையாக பெற உள்ளோம். 86 கோடி ரூபாய் செலவில் 121 அன்னதான கூடங்கள் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 2025 கோயில்களில் திருப்பணிகள் நடந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 2500 கோயில்களில் திருப்பணிகள் நடத்த பணிகள் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

காஷ்மீரில் 2 இடங்களில் மோதல்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஏட்டு பலி; 6 வீரர்கள் காயம்

டாக்டர்கள் மீது தாக்குதல் எதிரொலி; ஜூனியர் மருத்துவர்கள் மீண்டும் பணி நிறுத்தம்