நீர் மேலாண்மைக்கு பாடம் சொல்லும் நெல்லை கிராமம்

குளத்து நீரை சேமித்து கோடையில் நெல் சாகுபடி

தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடக்கூடிய வற்றாத ஜூவ நதியாக விளங்குகிறது நெல்லையின் தாமிரபரணி. 128 கி.மீ. நீளம் கொண்ட தாமிரபரணி ஆறு பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளைப் பூர்த்தி செய்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆற்றில் காரையார் அணை, பாபநாசம் அணை, சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை, கோடைமேலழகியான் அணை (தலையணை), நதியுண்ணி அணைக்கட்டு, கன்னடியன் அணைக்கட்டு, அரியநாயகிபுரம் அணைக்கட்டு, பழவூர் அணைக்கட்டு, சுத்தமல்லி அணைக்கட்டு, மருதூர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு என மொத்தம் 12 அணைக்கட்டுகள் உள்ளன. இந்த அணைக்கட்டுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீரானது பாசனத்திற்கு பிரித்து அனுப்பப்படுகிறது. தாமிர பரணி ஆற்றில் வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய் என மொத்தம் 11 கால்வாய்கள் மூலம் பல்வேறு குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கால்வாய்களின் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாக குளங்கள் மூலமும் பாசனவசதி பெறுகிறது.

தாமிரபரணிக்கு அடுத்து மிகப்பெரிய ஆறாக விளங்குகிறது அதன் துணை ஆறான சிற்றாறு. தென்காசி மாவட்டம் குற்றாலம் மலையில் உருவாகும் இந்த ஆறு 80 கிலோ மீட்டர் தூரம் பயணித்து நெல்லை மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றுக்கு ஐந்தருவிஆறு, அழுதகன்னிஆறு, அரிகரநதி, அனுமன்நதி, கருப்பாநதி ஆகிய 5 கிளை நதிகளும், குண்டாறு, மொட்டையாறு, உப்ேபாடை ஆகிய துணை நதிகளும் உள்ளன. சிற்றாற்றின் மூலம் நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாக குளங்களின் மூலமும் பாசன வசதி பெறுகிறது.

நெல்லை சுத்தமல்லி அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால்தான் நெல்லை கால்வாயில் தண்ணீர் வரும். இந்த தண்ணீர் நெல்லை கால்வாயின் கடைசி குளமான குப்பக்குறிச்சி குளம் வரை செல்கிறது. மொத்தம் 28 கி.மீ. நீளமுள்ள நெல்லைக் கால்வாயின் மூலம் நயினார்குளம், சேந்திமங்கலம்குளம், குறிச்சிகுளம், அழகநேரிகுளம், கல்குறிச்சிகுளம், குப்பக்குறிச்சிகுளம் உள்பட மொத்தம் 24 குளங்கள் பாசன வசதி பெறுகிறது. நெல்லை கால்வாய்க்கு உட்பட்ட வாய்க்கால் மூலம் 2,000 ஏக்கர் மற்றும் குளங்கள் மூலம் 3,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் பாபநாசம் அணையில் இருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்னர் நெல்லை கால்வாய் உள்ளிட்ட அனைத்து கால்வாய்களையும் முழுமையாக தூர்வாரினால்தான் தண்ணீர் சீரான முறையில் கடைசி பகுதி வரை சென்று சேரும். இந்த நிலையில் சுத்தமல்லி அணைக்கட்டில் இருந்து பிரிந்து செல்லும் நெல்லை கால்வாயின் கடைசி குளமான குப்பக்குறிச்சி குளத்தில் தண்ணீரை சேமித்து வைத்து, கோடை வெயில் கொளுத்தும் மே மாதத்திலும் நெல் பயிர் சாகுபடி செய்து அசத்தி வருகின்றனர் மேட்டுக்குப்பக்குறிச்சி பகுதி விவசாயிகள்.

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகேயுள்ள குப்பக்குறிச்சி குளத்து தண்ணீரைப் பயன்படுத்தி அந்த குளத்தை ஒட்டியுள்ள நிலங்களில் மே மாதத்தில் நெல் சாகுபடி செய்திருப்பது குறித்து மேட்டுக்குப்பக்குறிச்சியைச் சேர்ந்த விவசாயி முண்டன் மற்றும் மேட்டுக்குப்பக்குறிச்சி ஊர் நாட்டாமையும் விவசாயியுமான வேலாயுதம் ஆகியோரை ஒரு நாள் காலைப் பொழுதில் சந்தித்து பேசினோம்.‘‘நெல்லை கால்வாயின் கடைசி குளமாக குப்பக்குறிச்சி குளம் உள்ளது. இக்குளம் நிரம்பினால் அந்த உபரிநீர் சீவலப்பேரி பகுதியில் மீண்டும் தாமிரபரணி ஆற்றில் சென்று சேரும். மழைக்காலங்களில் அதிக மழை பெய்து பாபநாசம் அணையின் நீர்மட்டம் அதிகரித்தால் உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படும். அதுபோன்ற நேரங்களில் அனைத்து குளங்களும் நிரம்பி கடைசியில் உள்ள குப்பக்குறிச்சி குளத்துக்கும் அதிகளவு உபரிநீர் வந்து சேரும். அதோடு கல்குறிச்சி, பாலாமடை, அலங்காரப்பேரி, கங்கைகொண்டான் ஆகிய பகுதிகளிலுள்ள குளங்கள் நிரம்பி வரும் உபரிநீரும் குப்பக்குறிச்சி குளத்துக்கு வந்து சேரும். இதுபோல் மழைபெய்யும் காலங்களில் மழைநீரை பயன்படுத்தியும், தேவைக்கேற்ப குளத்து நீரைப் பயன்படுத்தியும் முதல்முறை நெல் சாகுபடி செய்வோம். இதுபோல் மழைநீர் கிடைக்கும் காலங்களில் குளத்தில் தண்ணீரை சேமித்து வைப்போம். அந்த நீரை கோடை காலத்தில் நெல் சாகுபடி செய்ய பயன்படுத்துவோம். இதுபோல் குப்பக்குறிச்சி குளத்தில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீரை சேமித்து வைத்து கோடை காலத்தில் இரண்டாவது முறை நெல் சாகுபடி செய்து வருகிறோம்.

நெல்லை மாவட்டத்தில் அம்பை 16, அம்பை 36, சோனல் (ஒற்றைநாற்று) போன்ற நெல் ரகங்கள் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. அக்சயபொன்னி நெல் ரகத்தையும் சிலர் பயிர் செய்வதுண்டு. தற்போது நாங்கள் 105 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய கோ 45 என்ற நெல் ரகத்தை பயிர் செய்துள்ளோம். கடந்த ஆண்டு சரியான மழை இல்லாததால் குளத்திற்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் குளத்தில் இருக்கும் தண்ணீருக்கு ஏற்ப இங்குள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இந்த ஆண்டு பாதியளவு நிலங்களில் மட்டுமே நெல் சாகுபடி செய்துள்ளோம். நான் எனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கோ 45 நெல் ரகத்தை பயிர் செய்துள்ளேன்’’ என்கிறார் மேட்டுக்குப்பக்குறிச்சி ஊர் நாட்டாமையும், விவசாயியுமான வேலாயுதம்.

‘‘நான் எனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் கோ 45 நெல் ரகத்தை பயிர் செய்துள்ளேன். 10 ஏக்கருக்கு கோ 45 விதைகளை தனியாரிடம் வாங்கினேன். 30 கிலோ எடையுள்ள ஒரு பை ரூ.1,100 வீதம் 15 பைகளுக்கு ரூ.16,500 செலவானது. இப்பகுதியில் உழுது பண்படுத்திய நிலையிலுள்ள வயல்களில் நெல் விதைகளை தூவிவிட்டு அப்படியே சிலர் வளர விடுவார்கள். அதை குழிமுத்து நடவுமுறை என்று சொல்வார்கள். இதுபோல் நடவு செய்த வயல்களில் பயிர்கள் கலக்கமாக வளர்ந்து வரும். இம்முறையில் விதைகள் குறைவாக செலவாகும். மேலும் இதில் மகசூல் குறைவாகவே கிடைக்கும். நான் எனது வயல்களில் நாற்றங்காலில் விதைகளை விதைத்து 22 நாள் கழித்து நாற்றுகளை எடுத்து வயலில் நடவு செய்தேன். பிறகு 15 நாள் கழித்து யூரியா உரமிட்டேன். 2 நாள் கழித்து பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளித்தேன். அதையடுத்து 2 நாள் கழித்து தற்போது களை எடுப்பு பணிகள் நடக்கிறது. இதையடுத்து ஒரு வாரம் கழித்து கலப்பு உரமிடுவேன். பின்னர் 10 நாள் கழித்து குருத்துபூச்சி உள்ளிட்ட பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிப்பேன். இதுபோல் தேவைக்கேற்ப உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை பயன்படுத்துவேன். வயல்களில் வளர்ந்துவரும் நெல்மணிகளை தின்பதற்காக வரும் பறவைகளை வராமல் தடுக்கும் விதமாக கம்புகளில் கயிறுகள், துணி போன்றவற்றை கட்டியுள்ள செண்டா என்பதை வயல்களில் அமைத்துள்ளேன். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். இவ்வாறு ெதாடர்ந்து பராமரித்து வந்தால் 105வது நாளில் நெல் அறுவடை செய்யலாம்.

ஒரு ஏக்கருக்கு 700 கிலோ வீதம் 10 ஏக்கர் நிலத்தில் இருந்து 7 ஆயிரம் கிலோ நெல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 75 கிலோ அளவுள்ள ஒரு மூட்டை நெல்லில் இருந்து 40 கிலோ அரிசி கிடைக்கும். நெல்லாக விற்கும்போது வெளிச்சந்தையில் 100 கிலோவுக்கு ரூ.1,300 என்ற விலையில், ஒரு டன்னுக்கு ரூ.13 ஆயிரம் கிடைக்கும். 10 ஏக்கரில் இருந்து கிடைக்கும் 7 ஆயிரம் (7 டன்) கிலோ நெல்லுக்கு ரூ.91 ஆயிரம் வருமானம் கிடைக்கும். ஆனால் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 100 கிலோவுக்கு ரூ.2,000 விலை கிடைக்கும். எனவே 10 ஏக்கரில் இருந்து கிடைக்கும் 7 ஆயிரம் கிலோ நெல்லுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும்
.
தற்போது 50 கிலோ அளவுள்ள பொட்டாஷ் உரம் ரூ.1,700க்கு விற்கப்படுகிறது. இதேபோல் அனைத்து உரங்களின் விலையும் அதிகரித்துவிட்டது. அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2,500 வீதம் வாடகை கொடுக்கிறோம். விதை, உரம், பூச்சிமருந்து, நெல் நடவு, களை எடுப்பு, அறுவடை உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.80 ஆயிரம் வரை செலவாகும். இதனால் விளைவிக்கும் நெல்லை வெளிச்சந்தையில் வியாபாரிகளிடம் விற்றால் ரூ.11,000 லாபம் கிடைக்கும். இதுவே அரசு கொள்முதல் செய்தால் ரூ.60 ஆயிரம் வரை எங்களுக்கு கூடுதலாக லாபம் கிடைக்கும்’’ என்கிறார் விவசாயி முண்டன்.

‘‘மேட்டுக்குப்பக்குறிச்சியில் ஏற்கெனவே கடந்த ஆண்டுகளில் அரசு கொள்முதல் நிலையம் அமைத்து, அதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்பட்டதால் இப்பகுதி விவசாயிகளுக்கு ஓரளவு நல்ல விலை கிடைத்தது. எனவே ஏற்கனவே செயல்பட்டுவந்தது போல் இந்த ஆண்டும் மேட்டுக்குப்பக்குறிச்சியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார் குப்பக்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தர்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!