நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மணிமுத்தாறு அணை கொள்ளளவை விட 10 மடங்கு கூடுதலாக தண்ணீர் வந்துள்ளது: தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மணிமுத்தாறு, பாபநாசம் அணை கொள்ளளவை விட 10 மடங்கு கூடுதலாக தண்ணீர் வந்துள்ளது என்று தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா நேற்று தூத்துக்குடி வந்தார். பின்னர் வெள்ளம் பாதித்த மறவன்மடம், குறிஞ்சிநகர், 3ம் கேட் பகுதி, அந்தோணியார்புரம், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சேதங்களை பார்வையிட்டார்.

மேலும், மீட்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை பக்கிள் ஓடை மூலமாக வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேங்கிய வெள்ளநீர் பம்பிங் செய்ய கூடுதல் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்குள் 40 முதல் 55 சென்டி மீட்டர் வரை மழை பெய்துள்ளது. இதன் மூலம் 150 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது.

இது மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளின் கொள்ளளவை விட 10 மடங்கு அதிகமாகும். ரூ.200 கோடியில் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இவை 10 செமீ அளவிற்கு மழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாதவாறு அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது தேங்கியுள்ள வெள்ளநீரானது இன்னும் ஒரு சில நாட்களில் வடிந்து விடும். விவசாய சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு தமிழக முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவி, ரேஷன் கார்டு அடிப்படையில் வழங்கும் பணி விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!