21ம் தேதி யோகா தினம்: உலக நாடுகளுக்கு சென்று யோகாவில் விருதுகள் குவிக்கும் நெல்லை சிறுவன்

நெல்லை: நெல்லையை சேர்ந்த 11 வயது சிறுவன் உலக நாடுகளுக்கு சென்று யோகாவில் விருதுகளை வாங்கி குவித்துள்ளார். பாளையை சேர்ந்த பிரபல வரலாற்று ஆய்வாளர் செ. திவான். இவரது பேரனும் டாக்டர் மஜீத் மற்றும் யோகா பட்டப்படிப்பு முடித்த ஆசிரியர் நஜாத் ஆகியோரின் மகனுமான ரெகான் சுலைமான் யோகாவில் உலக அளவில் கலக்கி வருகிறான். தற்போது 11 வயதாகும் இவன் 6ம் வகுப்பு பயின்று வருகிறான். தனது 4வது வயதிலேயே யோகா கற்க தொடங்கிய சுலைமான் கோவையை சேர்ந்த பிரபல யோகா பாட்டி என அழைக்கப்பட்டு தனது 99 வயதில் இயற்கை எய்திய யோகா ஆசிரியர் ஞானம்மாளிடம் யோகா பயிற்சி பெற்றான்.

அவரது மகன் பாலகிருஷ்ணனிடமும் யோகா பயிற்சி பெற்றான். தொடர்ந்து உள்ளூர், மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச யோகா போட்டிகளில் பங்கேற்று பரிசு பதக்கம், சான்றிதழ்களை குவிந்து வருகிறான். பெரும்பாலான போட்டிகளில் முதல் பரிசுடன் திரும்பியுள்ளான். யோகா ஆசிரியர் தகுதிக்கு உரிய அமெரிக்கா சிகாகோ சுப்ரா பள்ளியில் பயின்று பதிவு பெற்ற யோகா ஆசிரியர் பதவி மற்றும் யோகா சிரோன்மணி என்ற பட்டத்தை தனது 10வது வயதில் பெற்றான். இந்த ஆண்டு ஜனவரியில் கோவா மற்றும் அந்தமானில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசை பெற்றான். இதுபோல் தாய்லாந்தில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் முதல் பரிசை வென்றான்.

தொடர்ந்து கடந்த 8.5.2023ல் துபாயில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்று 11வது வயதில் யோகா முதல் பரிசை வென்றுள்ளான். இதுகுறித்து மாணவர் ரெகான் சுலைமான் கூறுகையில், யோகா ஒரு சிறந்த கலை. யோகா, தியானம் பயிற்சி பெற்றவர்கள் உடல் ஆரோக்கியம், மனநலத்துடன் இருக்கலாம். தற்போதைய பரபரப்பான உலகில் மன அழுத்தம், பதற்றம், படபடப்பு பாதிப்பு பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. இதனால் தொடர் நோய்களும் வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் யோகா தடுக்கிறது. கொரோனா காலத்தில் யோகா, மூச்சு பயிற்சி போன்றவைகளின் மகத்துவம் வெளிப்பட்டது. எனவே தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவிப்பதுடன் எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு யோகா அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது லட்சியமாகும்’’ என்றான்.

Related posts

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடையின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: கலெக்டர் அதிரடி

செடி, கொடிகள், மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் வாயலூர் பாலாற்று உயர் மட்ட பாலத்திற்கு ஆபத்து..? சாலையில் கிடக்கும் மண் குவியலை அகற்ற கோரிக்கை